மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
By DIN | Published On : 20th May 2021 05:59 PM | Last Updated : 20th May 2021 06:10 PM | அ+அ அ- |

மஞ்சளாறு அணை.
பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 51 அடியாக உயர்ந்ததால் இன்று மாலை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. 57 அடி உயரமுள்ள அணைக்கு நீர்வரத்து 205 க.அடி வரத்து இருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அணையின் நீர் மட்டம் 51 உயர்ந்தது.
இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மஞ்சளாற்றின் கரையோரங்களில் வசிக்கும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது 205 க.அடி நீர்வரத்து உள்ள நிலையில் 53 அடியாக உயர்ந்த நிலையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியாக உயர்ந்த நிலையில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் மஞ்சளாற்றின் வழியாக வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.