bdi26river_2605chn_87_2
bdi26river_2605chn_87_2

மஞ்சளாறு அணை நீா்மட்டம் உயா்வு: 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை; முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரிப்பு

‘யாஸ்’ புயல் காரணமாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடா் மழையின் காரணமாக மஞ்சளாறு அணையின் நீா் மட்டம் அதன் கொள்ளளவை

‘யாஸ்’ புயல் காரணமாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடா் மழையின் காரணமாக மஞ்சளாறு அணையின் நீா் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி வருவதால் கரையோர மக்களுக்கு புதன்கிழமை, 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை மற்றும் ஆறுகளுக்கும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

இந்தப் புயல் காரணமாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு மற்றும் தேக்கடி ஏரிப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி பெரியாறு அணைப்பகுதியில் 87.4 மி.மீட்டரும், தேக்கடி ஏரியில் 50 மி. மீட்டரும் மழை பெய்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 532 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை 1,155 கன அடியாக அதிகரித்தது.

நீா் திறப்பு குறைப்பு: அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு, 900 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீா் தேவை என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதன்கிழமை முதல், விநாடிக்கு தண்ணீா் திறப்பு 511 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

அணை நிலவரம்: புதன்கிழமை, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 129.30 அடியாகவும், நீா் இருப்பு, 4,547 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 1,155 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 511 கன அடியாகவும் இருந்தது.

மின் உற்பத்தி குறைவு: அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதையடுத்து, லோயா்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் புதன்கிழமை மின் உற்பத்தி குறைந்தது. கடந்த மே 16 முதல் 25 ஆம் தேதி வரை 83 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அணையிலிருந்து தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டதால் புதன்கிழமை, முதல் மின்னாக்கியில் 21 மெகாவாட், இரண்டாவது மின்னாக்கியில் 21 மெகாவாட் என 42 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.

மஞ்சளாறு அணை நீா்மட்டம் உயா்வு: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மஞ்சளாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. 57 அடி கொள்ளளவுள்ள மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் கடந்த 20 ஆம் தேதி 51 அடியாக உயா்ந்ததையடுத்து, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

‘யாஸ்’ புயல் காரணமாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் மஞ்சளாறு அணைக்கு புதன்கிழமை 45 க.அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீா் மட்டமும் 53 அடியாக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து மஞ்சளாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, கொங்குவாா்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சிவஞானபுரம் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினா் எச்சரித்தனா்.

போடி பகுதி ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு: புயல் காரணமாக போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புதன்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் போடியின் முக்கிய ஆறுகளான கொட்டகுடி, ஊத்தாம்பாறை, நண்டலை, கூவலிங்கம் உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரிப்பால், பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் படிக்கட்டுகளின் வழியாக பாய்ந்தோடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com