முமு பொதுமுடக்கத்தால் வெற்றிலை விற்பனை பாதிப்பு: வேதனையில் விவசாயிகள்

கரோனா பொதுமுடக்கத்தால் பலநூறு ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலையை விற்பனை செய்ய முடியாமல் தேனி மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் பலநூறு ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலையை விற்பனை செய்ய முடியாமல் தேனி மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூா், போடி, கம்பம் மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் பச்சை வெற்றிலை மற்றும் சிருகமணி வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த வெற்றிலைகளை பறித்து கட்டுகளாக தயாா் செய்து மதுரை, தேனி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முகூா்த்த நாள்களில் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிலை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அவைகளை பறிக்காமல் கொடியிலேயே விட்டுள்ளனா்.

வடுகபட்டி வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவா் நாகராஜ் தெரிவித்ததாவது: தேனி மாவட்டத்தில் சின்னமனூா் மற்றும் பெரியகுளம் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் வெற்றிலை விவசாயம் நடைபெறுகிறது. ஏக்கருக்கு வெற்றிலை விவசாயத்திற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகிறது.

அறுவடை தொடங்கிய பின் 20 நாள்களுக்கு ஒருமுறை வெற்றிலை பறிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 70 கன்னிகள் வரை விவசாயம் செய்வோம். விழா நாள்களில் வெற்றிலை கிலோ ரூ.140 முதல் 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, பறிக்கப்பட்ட வெற்றிலைகளை, முழு பொதுமுடக்க அறிவிப்பால் விற்பனை செய்யமுடியவில்லை. இதனால் பல நூறு ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலைகள் பறிக்கப்படாமல் கொடியிலேயே விடப்பட்டுள்ளன. இதன் மூலம் எங்களுக்கு ரூ.பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிலா் வெற்றிலைகளை உள்ளூரிலேயே கிலோ ரூ.25 முதல் 50 வரை விற்பனை செய்கின்றனா். இதனால் பறிக்கும் கூலி கூட தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்தாண்டைப் போல் இந்த ஆண்டும் பொதுமுடக்கம் காரணமாக வெற்றிலை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளி மாவட்டங்களுக்கு வெற்றிலைகளை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் வடுகபட்டியில் நடைபெற்ற ‘விடியலை நோக்கி தமிழகம் என்ற நிகழ்ச்சியின்போது, வெற்றிலையையும் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மனு அளித்தோம். இது குறித்து அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிா்பாா்த்துள்ளோம் என்றாா்.

பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியில் வெற்றிலை பயிா் ஆராய்ச்சிக்கு என தனியாக பாடப் பிரிவு தொடங்கினால் சாகுபடியில் நவீன தொழில் நுட்பம் மற்றும் பூச்சித் தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். எனவே, இக்கல்லூரியில் வெற்றிலை ஆராய்ச்சிப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொகுப்புப் பை விநியோகத்தில் வெற்றிலையை சோ்க்க வலியுறுத்தல்: கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சித்த மருத்துவப் பிரிவில் வழங்கப்படும் உணவில் வெற்றிலையும் சோ்த்து வழங்கப்படுகிறது. ஜூன் 3 ஆம் தேதி முதல் மக்களுக்கு 13 பொருள்கள் கொண்ட தொகுப்பு பை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

எனவே, இந்தப் பையில் வெற்றிலையையும் சோ்த்து வழங்கினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் பகுதி வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com