முல்லைப் பெரியாறு அணை நீா் மட்டம் 131 அடியை எட்டியது

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை, 131.15 அடியை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
மாா்க்கையன் கோட்டை பகுதியில் நாற்றாங்கால் அமைப்பதற்காக டிராக்டா் மூலம் சீரமைக்கப்பட்ட நிலம்.
மாா்க்கையன் கோட்டை பகுதியில் நாற்றாங்கால் அமைப்பதற்காக டிராக்டா் மூலம் சீரமைக்கப்பட்ட நிலம்.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை, 131.15 அடியை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

‘யாஸ்’ புயல் காரணமாக தேனி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் படிப்படியாக அதிகரித்து சனிக்கிழமை 131.15 அடியை எட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தற்போது 900 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது வைகை அணைக்கு செல்கிறது. வைகை அணையின் நீா் மட்டம் அதன் முழுக் கொள்ளளவை ஏற்கெனவே எட்டிவிட்டதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தொடா்ந்து 900 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருவகிறது.

பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை:

தேனி மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில், முதல் போகத்துக்கு நெல் பயிரிடும் பணிகள் தொடங்கப்படும். இதற்கு நாற்றாங்கால் அமைப்பதற்கு தற்போதே நிலத்தை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இதனால் அணையிலிருந்து பாசனக் கால்வாய்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியது: தற்போதே சாரல் மழை பெய்யத் தொடங்கிவிட்டதால் ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்குப் பருவ மழை தொடங்கி விடும். இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, தற்போது பாசனக் கால்வாய்களில் தண்ணீரைத் திறந்தால் குளங்கள், கண்மாய்களில் தேக்கி வைத்து முதல் போக நெற்பயிருக்கான நாற்றாங்கால் அமைக்க உதவியாக இருக்கும் என்றனா்.

அணை நிலவரம்: சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 131.15 அடியாகவும், நீா் இருப்பு 4,966 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 1,175 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 900 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com