ஹைவேவிஸ் மலைக் கிராமத்திற்கு பேருந்து சேவை தொடர வட்டாட்சியர் உத்தரவு

ஹைவேவிஸ் மலைக் கிராமத்திற்கு பேருந்து சேவை குறித்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், பேருந்து சேவை தொடர வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள்.
உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள்.

உத்தமபாளையம்: ஹைவேவிஸ் மலைக் கிராமத்திற்கு பேருந்து சேவை குறித்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், பேருந்து சேவை தொடர வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சி 4 மலைக் கிராமங்களுக்கு அரசுப்பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து மணலாரில் ஞாயிற்றுக்கிழமை 2 அரசுப் பேருந்துகளை  சிறைப்பிடித்து நடத்திய போராட்டத்தை தொடர்நந்து, திங்கள்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆர்ஜூனன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஹெச்.எம்.எஸ். தொழிலாளர் சங்க நிர்வாகிகள், வனத்துறை, போக்குவரத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், ஹெச்.எம்.எஸ் தொழிலாளர் சங்கத்தலைவர் முத்தையா பேசுகையில், ஹைவேவிஸ் பேரூராட்சியிலுள்ள 7 மலைக் கிராமங்களுக்கு சின்னமனூரிலிருந்து இரவங்கலார் வரையில் 2 அரசுப் பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. 

கடந்த 2 ஆண்டுகளாக அங்குள்ள மணலார், வெண்ணியார், இரவங்கலார் மற்றும் மகாராஜாமெட்டு ஆகிய 4 மலைக் கிராமங்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணிகள் முழுமை பெற வில்லை எனக்கூறி அக்கிராமங்களுக்கு பேருந்து சேவையை முடக்கி வைத்துள்ளனர். 

இது தனியார் பேருந்துக்கு சாதகமாக கம்பம் மற்றும் தேனி பணிமனை நிர்வாகம் செயல்படுகிறது. மேலும், மலைக் கிராமத்தினருக்கு வனத்துறை,போக்குவரத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருவதால் வேறுவழியின்றி மலைக்கிராமத்தினர் அந்தப் பகுதியை விட்டு வெளியேற போவதாகவும் கூறினர்.

வனத்துறையினர் கூறுகையில்,ஹைவேவிஸ் பகுதி புலிகள் சரணலாயத்திற்குள் வருவதால் அப்பகுதியில் சாலைகளை புனரமைப்பு செய்ய பசுமைப் தீர்ப்பாயத்தில் அனுமதி பெற வேண்டும் என்றனர்.

நெடுஞ்சாலைத்துறையினர், பசுமைத்தீர்பாயத்தில் அனுமதி சான்று பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் சாலைப்பணிகள் நடைபெறவில்லை.        

போக்குவரத்து துறையினர் கூறுகையில், புதிய பேருந்து என்பதால் சாலைப் பணிகள் 100 சதவீதம் முழுமை பெற வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத் துறையினர் உரிய சான்று அளித்த பின்னரே பேருந்து சேவை தொடரும் என்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலைக் கிராமத்தினர், 100 ஆண்டுகளாக பேருந்து சேவை இருந்து வருகிறது. சாலைகள் மிகவும் மோசமாக இருந்த நிலையில் பேருந்து சேவை தடையின்றி இயங்கியது. தற்போது, சுற்றுலா சொகுசு வாகனங்கள், தேயிலைத் தொழிற்சாலை செல்லும் கனரக வாகனங்கள், தனியார் பேருந்து என அனைத்து போக்குவரத்தும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த புதிய பேருந்துகளும் சென்று வந்த நிலையில் கரோனா ஊரடங்கிற்கு பின்னர் அடிப்படை தேவையான பேருந்து சேவையை போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டு முடக்கி வைத்து இருப்பதாக கூறினர்.

வட்டாட்சியர் உத்தரவு

போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை ஆய்வு செய்து, செவ்வாய் கிழமை முதல் மணலார், வெண்ணியார், இரவங்கலார் மற்றும் மகாராஜாமெட்டு ஆகிய 4 மலைக் கிராமங்களுக்கு தடையின்றி அரசுப் பேருந்து சேவையை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com