முல்லைப் பெரியாறு: கேரளம்-ஒற்றுமை; தமிழகம்-கருத்து வேறுபாடு

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து ஒரே அணியில் நிற்கின்றன.
முல்லைப் பெரியாறு: கேரளம்-ஒற்றுமை; தமிழகம்-கருத்து வேறுபாடு

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து ஒரே அணியில் நிற்கின்றன. அதே நேரத்தில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் மௌனம் காப்பதால், ஐந்து மாவட்ட மக்கள், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
 கடந்த காலங்களில் முல்லைப் பெரியாறு அணை 152 அடியாகவும் அதன் பின்பு, 136 அடியும் அதன் பின்பு தற்போது, 142 அடியாகவும் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவே விடக்கூடாது என்ற நிலையில் கேரளத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், ஆள்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கொள்கையுடன் தீவிரமாக உள்ளன.
 தொடர் முட்டுக்கட்டை: முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி மாவட்டம் அழியும், அது குறித்த காணொலிக் காட்சிகள், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தல், கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கான பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றல், அணையை அகற்றுவோம் என்று கேரள சினிமா நடிகர்களின் கோஷம், வழக்குரைஞர்கள் மூலம் தனிநபர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு, அணைப் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் அலுவலர்களுக்கு மிரட்டல், தமிழக பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அங்கு, இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒரு அணியில் நிற்கின்றனர்.
 மௌனத்தில் தமிழகக் கட்சிகள்: 142 அடியை உயர்த்தி விட்டோம், திமுக அரசு உயர்த்தவில்லை என்று அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த அக்டோபர் 29 இல் முல்லைப் பெரியாறு அணையில் மதகுகளின் வழியாக கேரளத்துக்கு உபரிநீர் திறந்து விட்ட நிலையில், அணையின் உரிமையை திமுக விட்டுக்கொடுத்து விட்டது என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்தினர்.
 தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர், ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான குடிநீர், விவசாயிகளின் பாசன வசதி போன்றவைக்கு அபாயம் ஏற்படும் என்று கருதாமல் போதுமான எதிர்ப்பு காட்டாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
 தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக உள்ள மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளும், பல அமைப்புகளைக் கொண்டுள்ள சிறுபான்மைக் கட்சியினரும்கூட முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக இதுவரை எவ்விதக் குரலும் எழுப்பவில்லை என்பது விவசாயிகளை வருத்தமடையச் செய்துள்ளது.
 ஓரணியில் கேரள அரசியல் கட்சிகள்: கேரளத்தில் ஆளும் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தமிழக இ.கம்யூனிஸ்டு கட்சி ஆதரவாக உள்ளதாகவும், கேரளத்தின் பிரதான எதிர்க் கட்சியான இ.காங்கிரஸ் கட்சி பெரியாறு அணை பிரச்னையில் அரசியல் எதிரியான இ.கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக உள்ளதாகவும், இதை ஐந்து மாவட்ட மக்கள், விவசாயிகள், புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
 ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகி கே.எம்.அப்பாஸ் கூறியது: தமிழக அரசியல் கட்சிகளுக்கு, கேரளத்தில் அமைப்புகள் உள்ளன. இதனால் அவர்கள் குரல் எழுப்ப மாட்டார்கள். அதே நேரத்தில் கேரள அரசியல் கட்சியினரோ இதைக் கண்டு கொள்வதில்லை. அவர்களின் ஒரே நிலைப்பாடு புதிய அணை கட்டுவோம் என்பதுதான். அதைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்றார்.
 கேரளத்தில் தொடரும் போராட்டம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று, உபரிநீர் செல்லும் வழியில் உள்ள சப்பாத்து பகுதியில் பொதுக்கூட்டம், உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸார் நடத்தினர். ஆர்.எஸ்.பி. என்னும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடுக்கி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அணை கட்ட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய அணை கட்ட வேண்டும், தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தர்னா போராட்டம் செய்தனர். தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
 முல்லைப் பெரியாறு அணை தமிழக உரிமை மீட்புக் குழு நிர்வாகி தங்க. பச்சையப்பன் கூறியது: அணையை உடைப்போம், புதிய அணையைக் கட்டுவோம் என்ற கேரள அரசியல் கட்சிகளின் தொடர் கோஷத்தால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டைப் போல எல்லையை நோக்கி போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கேரள அரசின் நடவடிக்கைகள் உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com