குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பாலம்: பணியை விரைவாக்க கோரிக்கை
By DIN | Published On : 23rd November 2021 02:31 PM | Last Updated : 23rd November 2021 02:31 PM | அ+அ அ- |

குமுளி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலம்
கம்பம்: தேனி மாவட்டம் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் பாலம் உள்ளதால் விரைந்து வேலைகளை முடிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் அருகே கோசேந்திர ஓடை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் குறுக்காக அமைந்துள்ள இந்த ஓடைக்கு நீர்வரத்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து வரும்.
கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையில் ஓடையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் ஏற்பட்டதால், வரத்து ஓடையில் நீர் அதிகரித்து பாலத்தின் இருபுறமும் உள்ள கரைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்திலும் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பல நாட்கள் ஆகியும் இன்னும் பணிகள் முழுமையடையாமல் உள்ளது.
தமிழக கேரள மாநிலங்களை இணைக்கும் பாலமாக இது உள்ளதால், நாள்தோறும் அதிகமான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து வருவதாலும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆபத்து ஏற்படும் முன். விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.