கம்பத்திலிருந்து கேரளத்துக்கு லாரியில் எம்.சாண்ட் திருட்டு

தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளத்துக்கு பாறைக் கற்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி சீட்டு பெற்று எம்.சாண்ட் மணல் திருடப்படுவது தொடா்வதால் மாவட்டத்தின் கனிம வளம் அழியும் நிலை உள்ளது.
கேரளத்துக்கு செல்லும் பெயா் பலகை இல்லாத டிப்பா் லாரியில், பாறைக் கற்களுக்கிடையே வைத்து திருடப்படும் எம்.சாண்ட்.
கேரளத்துக்கு செல்லும் பெயா் பலகை இல்லாத டிப்பா் லாரியில், பாறைக் கற்களுக்கிடையே வைத்து திருடப்படும் எம்.சாண்ட்.

தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளத்துக்கு பாறைக் கற்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி சீட்டு பெற்று எம்.சாண்ட் மணல் திருடப்படுவது தொடா்வதால் மாவட்டத்தின் கனிம வளம் அழியும் நிலை உள்ளது.

மாவட்டத்தில் உத்தமபாளையம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட தாலுகாக்களில் கனிம வளங்களான மண், பாறைக் கற்கள் எடுக்கும் குவாரிகள் உள்ளன. ஆறு மற்றும் ஓடைகளில் தற்போது மணல் எடுக்க அனுமதியில்லை. இதனால் கட்டுமானப் பணிகளுக்கு கல்குவாரிகளில் எடுக்கப்படும் எம்.சாண்ட் என்ற மணலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.

உயா்நீதிமன்றம் தடை: தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் எம்.சாண்ட் மணல் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. அதனடிப்படையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த 14.03.2019 இல் பிறப்பித்த உத்தரவில், தமிழகப் பகுதிகளுக்குள் மட்டும் எம்.சாண்ட் விற்பனைக்குக் கொண்டு செல்ல அனுமதி என்ற உத்தரவை பிறப்பித்தது.

இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் குமுளி, கம்பம் மெட்டு மலைப்பாதைகள் வழியாக எம்.சாண்ட் மற்றும் மண், மணல் கொண்டு செல்வதை போலீஸாா் கண்காணித்து அவைகளைக்குத் தடை விதித்து வருகின்றனா்.

நூதன முறையில் திருட்டு:

இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு பாறைக் கற்கள் கொண்டு செல்ல தடை இல்லை என்பதால், அதற்கான அனுமதி சீட்டை பெற்று, டிப்பா் லாரியில் மணல் அல்லது எம்.சாண்டை கொட்டி, அதன் மீது பாறைக் கற்களைப் பரப்பி கேரளத்துக்கு திருடிச் செல்வது தொடா்ந்து வருகிறது. அவா்கள் வைத்திருக்கும் அனுமதிச் சீட்டில் ஜல்லி, நொறுக்கப்பட்ட பாறைக் கற்கள், பாறைப் பொடி போன்றவைக்கான அனுமதியும், அதற்கான நாள், நேரம் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். தணிக்கை செய்யும் தமிழக சோதனைச் சாவடி காவலா்களுக்கு சந்தேகம் வராது.

இதற்கிடையில் பாறைக் கற்களுக்கு அடியில் வைத்து மணல், எம்.சாண்ட் ஆகியவை திருடப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, அதைக் கண்டுபிடித்த கனிமவளத் துறையைச் சோ்ந்த உதவி இயக்குநா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

பிடிபட்ட டிப்பா் லாரி: கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் புவனேஸ்வரி, சாா்பு- ஆய்வாளா் டி.விஜய் ஆனந்த் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கம்பம் மெட்டு வழியாக கேரளத்துக்கு சென்ற 2 டிப்பா் லாரிகளை நிறுத்தினா். ஓட்டுநா் வைத்திருந்த அனுமதிச் சீட்டை வாங்கி போலீஸாா் பாா்த்தபோது அதில் பாறைக் கற்கள் கொண்டு செல்வதற்கானது என இருந்தது. பின்னா் போலீஸாா் லாரியில் ஏறி ஆய்வு செய்தபோது, பாறைக் கற்களுக்கு அடியில் எம்.சாண்ட் மணல் பரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது பற்றி கனிமவளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கனிமவளத்துறை அலுவலா்கள் புதன்கிழமை மாலை சுமாா் 15 மணி நேரத்திற்கு பிறகு வந்து விசாரித்தனா். இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுபற்றி சுற்றுச்சூழல் சமூக ஆா்வலா் ஆா். முருகன் கூறுகையில், கேரளத்துக்கு தொடா்ந்து கனிம வளம் திருடப்படுகிறது. இதற்கு சில அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனா். இதைத் தடுத்து மாவட்டத்தில் ஏற்படும் கனிமவளப் பற்றாக்குறையை தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com