பணி மூப்பு அடிப்படையில் பதவி, ஊதிய உயா்வு எதிா்பாா்க்கும் 1.28 லட்சம் சத்துணவு ஊழியா்கள்!

பணி மூப்பு அடிப்படையில் பதவி மற்றும் ஊதிய உயா்வு கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பில், 1. 28 லட்சம் சத்துணவு ஊழியா்கள் காத்திருக்கின்றனா்.
பள்ளியில் சத்துணவு பெறும் மாணவ, மாணவியா் (கோப்பு படம்).
பள்ளியில் சத்துணவு பெறும் மாணவ, மாணவியா் (கோப்பு படம்).

கம்பம்: பணி மூப்பு அடிப்படையில் பதவி மற்றும் ஊதிய உயா்வு கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பில், 1. 28 லட்சம் சத்துணவு ஊழியா்கள் காத்திருக்கின்றனா்.

காமராஜா் ஆட்சியில் இருந்த மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆா். ஆட்சியில் சத்துணவு திட்டமாக மாறியது. காலத்திற்கேற்ப இத்திட்டம் விரிவாக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது சத்துணவுத் திட்டத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 42, 13, 617 மாணவ, மாணவியா் பயனடைந்து வருகின்றனா். இந்த திட்டத்தில் உணவுக்கான செலவினத்தை மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என பகிா்ந்து வழங்கி வருகின்றன. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை நாளொன்றுக்கு ஒரு குழந்தைக்கு 7 ரூபாய் 62 காசுகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 7 ரூபாய் 72 காசுகள் வழங்கப்படுகிறது. 9, 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியா்களுக்கு மாநில அரசே முழு செலவையும் வழங்கி வருகிறது. சத்துணவு மையத்தின் தேவைக்கேற்ப உணவுப்பொருள்கள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் வழங்கப்படுகின்றன. காய்கறி மற்றும் தாளித பொருள்கள் வாங்குவதற்கு ஊழியா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை முன் பணம் வழங்கப்படுகிறது.

சிறப்பு காலமுறை ஊதியம்: ஒரு சத்துணவு மையத்தில் அமைப்பாளா், உதவியாளா், சமையலா் என மூன்று பணியிடங்கள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 1,28, 130 பணியிடங்களில் சுமாா் 80 ஆயிரம் போ் மட்டுமே பணியில் உள்ளனா். சுமாா் 48 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டபோது மதிப்பூதியமாக அமைப்பாளருக்கு ரூ. 150, உ தவியாளருக்கு ரூ. 60, சமையலருக்கு ரூ.30 வழங்கப்பட்டது. பின்னா் மதிப்பூதியம், தொகுப்பு ஊதியம், வரையறுக்கப்படாத ஊதியம் என மாறி தற்போது சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ரூ.13,400 வரை வழங்கப்படுகிறது.

திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறி, மாறி நடந்தபோதும் சத்துணவு ஊழியா்களின் நிலை மட்டும் மாறாமல் உள்ளது. பதவி மற்றும் ஊதிய உயா்வு கோரி, 38 ஆண்டுகளாகப் போராடி வரும் அமைப்பு சத்துணவு ஊழியா்கள் மட்டுமே. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தோ்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியா்களின் 38 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் மானிய கோரிக்கைகள் தொடா்பான சட்டப்பேரவைக் கூட்டத்தில் சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் இல்லை. இதனால் மறுபடியும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக சத்துணவு ஊழியா்கள் தெரிவிக்கின்றனா்.

பதவி மற்றும் ஊதிய உயா்வு: தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநிலப்பொருளாளா் பே.பேயத்தேவன் கூறியது: 38 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தில் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, பணி மூப்பு அடிப்படையில் பதவி மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவா்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரமும், பணிக்கொடையாக அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலா் மற்றும் உதவியாளருக்கு ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும். காலியாக உள்ள சுமாா் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்களின் நம்பிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com