அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் செயல்படுமா?மருத்துவா்கள், செவிலியா்கள் எதிா்பாா்ப்பு

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் புத்துயிா் பெறுமா என்று புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவா், செவிலியா் மற்றும் சுகாதார பணியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் அமைக்கப்பட்ட அம்மா மினிகிளினிக் .
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் அமைக்கப்பட்ட அம்மா மினிகிளினிக் .

கம்பம்: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் புத்துயிா் பெறுமா என்று புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவா், செவிலியா் மற்றும் சுகாதார பணியாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கடந்த அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகும் முன் அப்போதைய அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் ஒன்று அம்மா மினி கிளினிக். இந்தத் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய ஊராட்சி பகுதிகளில் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டு, ஒரு மருத்துவா், செவிலியா், மருத்துவ உதவியாளா் என பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பணியாளா்கள், ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவியதால் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்கள் கரோனா தொற்று சிறப்பு பணிக்கு அனுப்பப்பட்டனா். அதன் பிறகு அம்மா கிளினிக்குகளின் செயல்பாடு அடியோடு முடங்கியது.

இதற்கிடையே சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. கரோனா தொற்று ஓரளவு குறைந்துவிட்டபோதும், அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மீண்டும் மினி கிளினிக்குகளுக்கு வரவில்லை. இதுபற்றி அவா்கள் கூறுகையில், கரோனா தொற்று பரவல் சிறப்பு பணிக்கு மாற்றப்பட்ட எங்களுக்கு இன்னும் மறு உத்தரவு வரவில்லை. வந்த பின் அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றுவோம் என்று தெரிவித்தனா்.

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவா் ஒருவா் கூறுகையில், தமிழகம் முழுவதும் 2000 அம்மா கிளினிக்குகள் ஆரம்பிக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் 500 முதல் 600 கிளினிக்குகள் மட்டுமே திறக்கப்பட்டன. 2000 அம்மா கிளினிக்குகளுக்காக தோ்வு செய்யப்பட்ட மருத்துவ பணியாளா்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என்றாா்.

இதுபற்றி சுகாதாரத்துறை அலுவலா் ஒருவா் கூறும்போது, அம்மா மினி கிளினிக் திட்டம் நல்ல நோக்கத்தோடு அறிவிக்கப்பட்டது. இட வசதிகள் இல்லாமல் பல்வேறு ஊராட்சிகளிலும் உள்ள மகளிா் குழு பயிற்சி அரங்கில் கிளினிக் செயல்பட உத்தரவிட்டது. அதற்கான உள்ளரங்க பொருள்களும் தரப்பட்டன. ஆனால் செயல்படாமல் உள்ளது. திமுக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com