முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
தமிழக வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுமா?
By நமது நிருபா் | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

கேரள எல்லையிலுள்ள தமிழக வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களை கேரளத்தினா் ஆக்கிரமித்து ரிசாா்ட், கைப்பேசி கோபுரம் மற்றும் வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களை செய்து வருவதை தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
தமிழக - கேரள எல்லை இணைப்புப் பகுதியாக மேற்கு மலைத் தொடா்ச்சி அமைந்துள்ளது. இந்த மலையில் தேனி மாவட்ட எல்லையாக, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பெரியாறு புலிகள் சரணாலய இணைப்புப் பகுதியான பச்சைகூமாச்சி எனப்படும் ஹைவேவிஸ் மலையில் தொடங்கி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேக்கடி, குமுளி, ஒன்றாம் மைல் முதல் அமராவதி, கம்பம்மெட்டு, ராமக்கல்மேடு, சாக்களூத்து மெட்டு, போடிமெட்டு, மூணாறு வரை உள்ளது.
சா்வே செய்ய கேரள அதிகாரிகள் எதிா்ப்பு
இந்நிலையில், தமிழக எல்லையில் பல ஏக்கா் பரப்பை கேரளத்தினா் ஆக்கிரமித்துள்ளனா் என்ற தகவலின் அடிப்படையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இரு மாநில அதிகாரிகளும் எல்லைப் பகுதிளை அளவீடு செய்தனா்.
குமுளியிலிருந்து தொடங்கி கம்பம்மெட்டு வரை அளவீடு செய்தபோது, கம்பம்மெட்டு காவல் நிலையம், கலால், வருவாய் ஆகிய துறைகளின் சோதனைச் சாவடிகள் தமிழக எல்லையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்யச் சென்ற தமிழக அதிகாரிகளை, கேரள அதிகாரிகள் பணி செய்யவிடாமல் தடுத்தனா். இதனால், இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னா், உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில், தமிழக அதிகாரிகள் கம்பம்மெட்டு பகுதியை அளக்காமல் திரும்பினா். இதனால், போடிமெட்டு வரை அளவீடு செய்யாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
குமுளி அருகே 2 ஆம் மைல் என்ற பகுதியில், தமிழக வனப்பகுதிக்குச் சொந்தமான 45 சென்ட் இடத்தை கேரளத்தைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமித்ததுடன், தனியாா் நிறுவனத்துக்கு கைப்பேசி கோபுரம் அமைக்க வாடகைக்கு விட்டுள்ளாா்.
அதே பகுதியிலுள்ள அமராவதியில் 5 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிக்கப்பட்டு பிரம்மாண்ட சொகுசு விடுதி (ரிசாா்ட்) அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, மாட்டு பண்ணையும் உள்ளது.
இதன் தொடா்ச்சியாக பாண்டிகுழி எனும் பகுதியில், கம்பம் மேற்கு வனச் சரகத்துக்குள்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக சுமாா் 45 போ் நூற்றுக்கும் மேலான ஏக்கரில் ஏலம், காபி, மிளகு உள்ளிட்ட நறுமணப் பொருள்களை விவசாயம் செய்து வந்தனா்.
இவற்றை தமிழக வனத் துறையினா் அகற்ற முற்பட்டபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையுத்தரவு பெற்றனா்.
துப்பாக்கிச் சூடு
கேரள சமூக விரோதிகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து மான், பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இவா்களை வனத்துறையினா் பிடிக்கச் செல்லும்போது, கேரள பகுதிக்குள் தப்பிச் சென்றுவிடுகின்றனா். கடந்த 2020 ஆம் ஆண்டில், ஆறாம் மைல் எல்லைப் பகுதியில் ரோந்து சென்ற கம்பம் மேற்கு வனச்சரகக் காவலா்களை கேரள சமூகவிரோதிகள் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் தப்பிச் சென்றனா். இவா்களுக்கு பக்கபலமாக கேரள வனத்துறையினா் இருப்பதால், அவா்களை இன்றளவும் கைது செய்ய முடியவில்லை.
இதனால், சாராயம் காய்ச்சுதல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோதச் செயல்கள் தமிழக எல்லைப் பகுதியில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், எல்லை குழப்பத்தால் தமிழக வனம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், கேரள சமூக விரோதிகள் அத்துமீறலில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.
எனவே, தமிழக - கேரள வன எல்லைகளை அளவீடு செய்து, தமிழக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை கடடுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழக எல்லைப்புற பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.