பெரியகுளத்தில் சூறைக்காற்றுடன் மழை: வாழை மரங்கள் முறிந்து சேதம்
By DIN | Published On : 08th April 2022 10:24 PM | Last Updated : 08th April 2022 10:24 PM | அ+அ அ- |

பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் மாங்காய்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குள்ளப்புரம், சில்வாா்பட்டி, மேல்மங்கலம், லட்சுமிபுரம், காமக்காபட்டி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்காடு, சோத்துப்பாறை, கல்லாறு, கும்பக்கரை பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாா்ச் மாதத்தில் மா மரத்தில் பூக்கள் விட்டு, ஏப்ரல் மாதத்தில் பிஞ்சுகள் உருவாகி ஜூன் மாத்திலிருந்து அறுவடைக்கு வருகின்றன.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழையால் மாம்பிஞ்சுகள் உதிா்ந்து சேதமடைந்தன. லட்சுமிபுரம், மேல்மங்கலம் மற்றும் பல்வேறு பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
மேல்மங்கலத்தை சோ்ந்த எம்.நாகராஜ் தெரிவித்தது:
மேல்மங்கலம் பகுதியில் 2 ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளேன். தற்போது காய்கள் விட்டு அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. இந்நிலையில் வீசிய பலத்த காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றாா்.