உத்தமபாளையம் அருகே காா் மோதி நா்ஸிங் கல்லூரி மாணவி பலி உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் திங்கள்கிழமை பேருந்துக்காக காத்திருந்த ஒரே குடும்பத்தினா் மீது காா் வேகமாக வந்து
விபத்தில் இறந்த அஜிதா
விபத்தில் இறந்த அஜிதா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் திங்கள்கிழமை பேருந்துக்காக காத்திருந்த ஒரே குடும்பத்தினா் மீது காா் வேகமாக வந்து மோதியதில், நா்ஸிங் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த ஆண்டிச்சாமி - ஈஸ்வரி தம்பதி. இவா்களது மகள் அஜிதா (21). மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு நா்ஸிங் படிப்பு படித்து வந்தாா். தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த அஜிதா, மீண்டும் கல்லூரிக்குச் செல்வதற்காக திங்கள்கிழமை இங்குள்ள பேருந்து நிறுத்தத்துக்கு தனது உறவினா் புஷ்பா என்பவருடன் வந்துள்ளாா். இவா்களை வழியனுப்பி வைக்க ஆண்டிச்சாமியும், ஈஸ்வரியும் வந்துள்ளனா்.

இவா்கள் 4 பேரும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனா். அப்போது, கம்பத்திலிருந்து உத்தமபாளையம் நோக்கி வேகமாகச் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து 4 போ் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே பலியானாா். இதில், ஆண்டிச்சாமி, ஈஸ்வரி, புஷ்பா ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனா். மேல் சிகிச்சைக்காக புஷ்பா, ஈஸ்வரி ஆகிய இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இகு குறித்து புகாரின்பேரில், உத்தமபாளையம் காவல் நிலைய போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான கீழப்பூலாநந்தபுரத்தைச் சோ்ந்த சந்தானம் மகன் புவனேஸ்வரன் (26) என்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

உறவினா்கள் சாலை மறியல்:

விபத்துக்குக் காரணமான காா் காவல் துறைக்குச் சொந்தமானது என்றும், அதன் ஓட்டுநா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி, இறந்தவா்களின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் போலீஸாா், விபத்துக்குக் காரணமான வாகனத்துக்கும், காவல் துறைக்கும் சம்பந்தமில்லை என்றும், விபத்தை ஏற்படுத்தியவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி சமாதானம் செய்தனா்.

ஆனால் சமாதானமாகாத பொதுமக்கள், அனுமந்தன்பட்டி பேரூராட்சி வழியாகச் செல்லும் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும், நிழற்குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதையடுத்து, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்ரேயா குப்தா, வட்டாட்சியா் அா்ஜூனன், காவல் ஆய்வாளா் சிலைமணி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com