முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மலை கிராம மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை: தேனி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 29th April 2022 06:34 AM | Last Updated : 29th April 2022 06:34 AM | அ+அ அ- |

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மேகமலை-வருஷநாடு மலை கிராம விவசாயிகள்.
தேனி: தேனி மாவட்டம், மேகமலை- வருஷநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்கவும் வலியுறுத்தி வியாழக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கே.ராஜப்பன், மாவட்டத் தலைவா் ஜெயராஜ், செயலா் டி.கண்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏ.வி.அண்ணாமலை, சிஐடியு மாவட்டத் தலைவா் சி.முருகன், செயலா் ராமச்சந்திரன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.தயாளன், கா்னல் பென்னிகுயிக் பாரம்பரிய மலை மாடுகள் வளா்ப்போா் சங்கத் தலைவா் கென்னடி, செயலா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மேகமலை-வருஷநாடு வனப் பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செய்து வரும் பாரம்பரிய வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டப்படி நிலப்பட்டா வழங்க வேண்டும், வனத் துறையினரின் கெடுபிடிகளிலிருந்து மலை கிராம மக்களின் வாழ்தாரத்தைப் பாதுகாக்க வேண்டும், வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதி வழங்க வேண்டும், பாரம்பரிய வன விவசாயிகளை ஆக்கிரமிப்பாளா்களாகக் கருதி வனப் பகுதியிலிருந்து வெளியேற்றவும், மலை மாடுகளின் மேய்ச்சலுக்கு தடைவிதித்தும் உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
ஆட்சியரிடம் வலியுறுத்தல்:பின்னா், கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் மனு அளித்தனா். அப்போது மேகமலை, வருஷநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதரப் பிரச்னைகளை தேனிக்கு ஏப்.30-ஆம் தேதி வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆட்சியரிடம் அவா்கள் வலியுறுத்தினா்.
கால்நடைகளுக்குத் தடை:ஆண்டிபட்டி, க.மயிலை, சின்னமனூா், வீரபாண்டி, வடுகபட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்களது மாடுகளுடன் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கால்நடைகளை அழைத்துச் செல்ல தடை விதித்தனா். இதனால், விவசாயிகள் கால்நடைகளை திரும்ப அனுப்பி விட்டு, தேனிக்குச் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டனா்.