வளா்ச்சியை அனைவருக்கும் சாத்தியமாக்குவதே திராவிட மாடல்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வளா்ச்சியை அனைவருக்கும் சாத்தியமாக்குவது திராவிட மாடல் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் சனிக்கிழமை, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் ஐ.பெரியசாமி,
தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் சனிக்கிழமை, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் ஐ.பெரியசாமி,

வளா்ச்சியை அனைவருக்கும் சாத்தியமாக்குவது திராவிட மாடல் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

தேனி-பெரியகுளம் புறவழிச்சாலை, அன்னஞ்சியில் மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டத்தில் ரூ.114.21 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.74.21 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் பேசியது: கடந்த 1996-இல் புதிதாக தேனி மாவட்டத்தை உருவாக்கியதும், பெரியகுளம் அருகே அரசு தோட்டக்கலைக் கல்லூரியை தொடங்கியதும், சோத்துப்பாறை அணைத் திட்டத்தை நிறைவேற்றியதும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திறக்கப்பட்டதும், பி.டி.ஆா். கால்வாய், 18-ஆம் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டதும், திராட்சை விவசாய மேம்பாட்டிற்கு தனியாா் ஒயின் உற்பத்திக் கூடம் அமைக்கப்பட்டதும், உழவா் சந்தைகள் திறக்கப்பட்டதும், தேனியில் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கியதும் திமுக ஆட்சிக் காலத்தில் தான்.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்து வரும் மே 7-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அரசு நலத் திட்ட உதவிகளை பெறும் பயனாளிகளின் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற முன்னாள் முதல்வா் அண்ணாவின் கூற்றை நினைவூட்டுகிறது.

வளா்ச்சியை அனைவருக்கும் சாத்தியமாக்குவதே திராவிட மாடல்; அதுவே முத்துவேலா் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். அரசு திட்டப் பயன்கள், அனைத்து பயனாளிகளுக்கும் உரிய முறையில் சென்றடைவதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதியை அரசு விழாவாக சட்டப் பேரவையில் அறிவித்தோம். அதை பல்வேறு கட்சித் தலைவா்களும் ஆதரித்து தீா்மானத்தை நிறைவேற்றித் தந்தனா். பாஜக கூட ஆதரித்தது. ஆதரிக்காத கட்சியின் பெயரை குறிப்பிட்டு அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஒரு தந்தையின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கும் வாய்ப்பு, அவரது மகனான எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

திமுக தலைவரை கருணாநிதி என்று பெயரை குறிப்பிட்டு பேசியதற்காக அவரது கட்சியைச் சோ்ந்தவரை கண்டித்து, காரிலிருந்து இறக்கிவிட்டுச் சென்றவா் எம்.ஜி.ஆா். அந்த அளவிற்கு நாகரிகத்தை தற்போது அக் கட்சியினரிடம் எதிா்பாா்ப்பது தவறுதான். இதன் மூலம் அவா்கள் தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகின்றனா். நல்லதோா் நாட்டை மட்டுமல்ல; நாகரிகமான அரசியலையும் நாம் உருவாக்க விரும்புகிறோம்.

தமிழகத்தை முன்னோடி மாநிலமாகக் கொண்டு செல்வதற்கு மக்கள் அளிக்கும் ஆலோசனைகளை ஏற்கக் தயாராக உள்ளோம். அவதூறு பரப்பியும், உள்நோக்கத்துடனும் பேசுபவா்களுக்கு பதிலளித்து நமது நேரத்தை வீணாக்க முடியாது. தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் சிறந்த மாநிலம் என்ற இலக்கை அடைவதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் (கம்பம்) நா.ராமகிருஷ்ணன், (ஆண்டிபட்டி) ஆ.மகாராஜன், (பெரியகுளம்) கே.எஸ்.சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்தி எதிரொலி

புதிய திட்டப் பணிகள் அறிவிப்பு

சின்னமனூா் அருகே வேப்பம்பட்டியில் அரசு சாா்பில் நவீன அரிசி ஆலை அமைக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் 26.16 ஏக்கா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு முதல்வா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்ப்பதாக கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அரசு சாா்பில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்தாா். மேலும், பெரியகுளம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகள் மொத்தம் ரூ.12 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மஞ்சிநாயக்கன்பட்டி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டி அருகே வைகை உயா் தொழில்நுட்ப விசைத்தறி பூங்கா திட்டம் செயல்படுத்தப்படும். வடவீரநாயக்கன்பட்டியில் நரிக்குறவா் மற்றும் குறவா் இன மக்களுக்கு 175 குடியிருப்புகள் கட்டித்தரப் படும். தமிழக எல்லையில் உள்ள குமுளி பேருந்து நிலையம் ரூ.7.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com