ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.1) நடைபெறுகிறது. இதில் அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டத்திற்கு தயாா் நிலையில் இருக்கும் தோ்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டத்திற்கு தயாா் நிலையில் இருக்கும் தோ்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.1) நடைபெறுகிறது. இதில் அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த ஆண்டு தோ் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாக்கள் நடைபெற்றன. ஐந்தாம் நாள் விழாவில் கருட சேவை நடைபெற்ற நிலையில், 7 நாள் விழாவில் சயனக்கோலத்தில் காட்சியளித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.1) காலை நடைபெறுகிறது. முன்னதாக அதிகாலையில் ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஆண்டாளும், ரெங்கமன்னாரும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி தேரை வந்தடைகின்றனா்.

தொடா்ந்து காலை 9 மணியளவில் தேரோட்டம் தொடங்குகிறது. இதில் தமிழக அமைச்சா்களும், உயா்நீதிமன்ற நீதிபதிகளும், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களும், அரசு அறநிலையத்துறை அதிகாரிகளும், திரளான பக்தா்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடிக்கின்றனா். தோ் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. தேரோடும் வீதிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் வசதிக்காக மருத்துவம், குடிநீா், அன்னதானம், போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 7 நாள்களாக தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் அனைத்திலும் ஏராளமான பக்தா்கள் முகாமிட்டு உள்ளனா். பக்தா்களின் பாதுகாப்புக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், காவல் ஆய்வாளா் கீதா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நான்கு ரத வீதிகளிலும் உயரமான கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேரோட்டத்தையொட்டி, விருதுநகா் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com