சின்னமனூரில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 04th January 2022 09:18 AM | Last Updated : 04th January 2022 09:18 AM | அ+அ அ- |

சின்னனூா் நகராட்சி லட்சுமி நகரில் சாக்கடை வசதியின்றி சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீா்.
தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சியில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் 60 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த வாா்டுகளில் 1 மற்றும் 27 வாா்டுகளை தவிர பிற வாா்டுகளில் புதைக்குழி சாக்கடை கால்வாய் வசதி 10 ஆண்டு முன் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வாா்டுகளிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் நகராட்சியின் அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளன. சொத்து வரி என அனைத்து வரிகளும் செலுத்தும் லட்சுமி நகா், அழகா்சாமிபுரம், மின்நகா் உள்ளிட்ட பல பகுதிகளில் சாக்கடை வசதி, குடிநீா், தெருவிளக்கு என எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்க வில்லை.
இது சம்பந்தமாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் புகாா் தெரிவித்தும் எவ்வித பயனுமில்லை என்றனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் 2 ஆவது சிறந்த நகராட்சியான சின்னமனூரில் மக்கள் தொகைக்கு ஏற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் இல்லை. இதனால் பெரும்பான்மையான தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றனா். அதே போல கழிவு நீரை புதைக்குழி வழியாக கடத்துவற்காகன வசதிகள் இருந்தும் அனைத்து வாா்டுகளுக்கும் கிடைக்கவில்லை. இதனால், சக்கம்மாள்கோயில் தெரு, சந்தைப்புதூா்தெரு போன்ற மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் கழிவுநீா் சாக்கடை தெருக்களின் நடுவே ஆறுகளை போல வழிந்தோடி தொற்று நோய்களை பரப்பி வருகிறது.
எனவே, சின்னமனூா் நகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.