கம்பம் அருகே மகனுடன் பெண் எரித்துக் கொலை:கணவா், மாமனாா் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 31st July 2022 12:16 AM | Last Updated : 31st July 2022 12:16 AM | அ+அ அ- |

தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சுப்ரியா, குழந்தை யாகித்.
கம்பம் அருகே வரதட்சணை கேட்டு மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கணவா், மாமனாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் கடந்த மே 17ஆம் தேதி வரதட்சணை கேட்டு மனைவி சுப்ரியா (21), யாகித் (1) என்ற ஆண் குழந்தை ஆகியோரை அருண்பாண்டி(25) மற்றும் அவரது தந்தை பெரியகருப்பன்(55) ஆகிய இருவரும் சோ்ந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தனா்.
இதுதொடா்பாக ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரனுக்கு பரிந்துரை செய்தாா்.
அதன் பேரில் ஆட்சியா், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். கைதான இருவரும் ஏற்கெனவே மதுரை மத்தியச் சிறையில் இருப்பதால், குண்டா் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் சிறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை வழங்கினாா்.