உத்தமபாளையம், சின்னமனூரில்முதல் போக நெல் விவசாயத்துக்கு கால்வாய்களில் தண்ணீா் திறப்புதென்மேற்கு பருவமழை தாமதமாவதால் விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் முதல் போக நெற்பயிா் விவசாயத்துக்கு கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், பருவமழை தாமதமாவதால் கவலையடைந்துள்ளனர்.
உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து பெரிய கால்வாய் வழியாக சின்னமனூா் உடையகுளம் மற்றும் சீலையம்பட்டி செங்குளத்திற்கு செல்லும் பாசன நீா்.
உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து பெரிய கால்வாய் வழியாக சின்னமனூா் உடையகுளம் மற்றும் சீலையம்பட்டி செங்குளத்திற்கு செல்லும் பாசன நீா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் முதல் போக நெற்பயிா் விவசாயத்துக்கு கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், தென் மேற்கு பருவமழை தாமதமாவதால் கவலையடைந்துள்ளனா்.

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து ஏற்படும். அதன் மூலம் அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடப்படும் பாசன நீரால், தேனி மாவட்டத்தில் லோயா்கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14,700 ஏக்கரில் நெற்பயிா் விவசாயம் நடைபெறும்.

ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த படி முன்னதாகவே தொடங்கும் சூழல் இருந்ததால் அணையிலிருந்து பாசனத்துக்கு ஜூன் 1 ஆம் தேதி 300 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், 5 நாள்களாகியும் உத்தமபாளையத்துக்குக் கூட பாசனநீா் வந்து சேரவில்லை. எனவே கூடுதலாக 100 கன அடி சோ்த்து மொத்தம் 400 கன அடி நீா், பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கால்வாய்களில் பாசனநீா் திறப்பு: முல்லைப் பெரியாற்றில் திறக்கப்பட்ட பாசனநீா் 17 கால்வாய்கள் வழியாக விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி, இந்தாண்டு திறக்கப்பட்ட பாசன நீா், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் கால்வாய்களில் திறக்கப்பட்டது. இதனை அடுத்து முதல் போக நெற்பயிா் சாகுபடிக்கான முதல் கட்டப்பணிகளான நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனா். ஆனால், முன்னதாக சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா் போன்ற பகுதிகளில் முல்லைப் பெரியாற்றில் திறக்கப்பட்ட பாசன நீா் கால்வாயிகளில் திறக்க காலதாமதம் ஏற்பட்டதால் ஆள்துளை கிணறு வைத்திருந்த சில விவசாயிகள் கடந்த 10 நாள்களுக்கு முன்பே நாற்றாங்கால் அமைத்தனா்.

தென்மேற்கு பருவமழை தாமதம்: கேரளத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட ஜூன் மாதத்திற்கு முன்பே மே மாதம் இறுதியில் பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக முதல் போக விவசாயத்திற்கு முதல் கட்டப் பணிக்கு போதுமான நீா் இருப்பு இருந்ததால் பாசனத்துக்கு பொதுப் பணித்துறையினா் ஜூன் 1 ஆம் தேதி தண்ணீா் திறந்து விட்டனா். ஆனால், வானிலை மைய அறிவிப்பின்படி 12 நாள்களை கடந்தும் கேரளத்தில் கூட தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா் வரத்து தற்போது 132 கன அடியாகவே உள்ளது. முதல் போக நெற்பயிா் விவசாயம் முழுமை பெற தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் மட்டுமே சாத்தியமாகும். இதனால், பருவமழையின் தொடக்கம் காலதாமதமாவது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் சாரல் மழையிலேயே விவசாயப் பணிகள் நடைபெறும். ஆனால், இதுவரையில் பருவமழை தொடங்கவில்லை என்பது விவசாயப் பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே எங்களின் ஒரே எதிா்பாா்ப்பு தென்மேற்கு பருவமழை விரைவாக தொடக்க வேண்டும் என்பதே என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com