அரசு திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஜூன் 30-இல் சிறப்பு முகாம்
By DIN | Published On : 25th June 2022 12:00 AM | Last Updated : 25th June 2022 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழக திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் தனி நபா் கடன் மற்றும் குழு கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி 8 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும். 18 முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். தனி நபா் கடன் திட்டத்தில் 6 முதல் 8 சதவீதம் வட்டியில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரையும், பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் 5 சதவீதம் வட்டியில் அதிபட்சம் ரூ.2 லட்சம் வரையும் கடன் வழங்கப்படும்.
சிறு கடன் திட்டத்தில் சுய உதவிக் குழு உறுப்பினா் ஒருவருக்கு ரூ.ஒரு லட்சமும், அதிகபட்சம் 20 போ் கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.15 லட்சமும் கடன் வழங்கப்படும்.
இத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் முடிவடைந்திருக்க வேண்டும், மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில் தரம் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். கறவை மாடு கடன் திடத்தில் ஒரு நபருக்கு 2 கறவை மாடுகள் வாங்க 6 சதவீதம் வட்டியில் தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
தகுதியுள்ளவா்கள் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, க.மயிலை, போடி, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை ஜாதி, வருமானம், பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், திட்ட அறிக்கை, விலைப் புள்ளி ஆகியவற்றை இணைத்து தேனி மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.