முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
ஹைவேவிஸ்-மேகமலைக் கிராமங்களில் சேதப்படுத்தும் காட்டு யானைகள் கூட்டம்: அச்சத்தில் மக்கள்(விடியோ)
By DIN | Published On : 14th March 2022 09:55 AM | Last Updated : 14th March 2022 02:39 PM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஹைவேவிஸ்-மேகமலைக் கிராமங்களில் கடந்த 4 மாதங்களாக உலாவி வரும் காட்டு யானைக்கூட்டம் வாகனங்கள், மின்கம்பங்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதியினர் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேற்குத்தொடர்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு யானைகள், சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டு மாடு, சிங்கவால் குரங்கு, சாம்பல் நிற அணில் என பல வகையான வன விலங்களுக்குள் உள்ளன.
இந்த மலைப்பகுதியை யுனெஸ்கோ நிறுவனம் பல்லூயிர் பெருக்கும் மலைப் பிரதேசமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.
4 மாதங்களாக உலாவும் காட்டுயானைக் கூட்டம்:
தமிழகம் மற்றும் கேரளத்திற்கு சொந்தமான வனப்பகுதியில் வசிக்கும் விலங்கு தனது வாழ்விடத்திற்கு ஏற்ப அவ்வப்போது இடம் பெயர்வது வழக்கம். அவ்வாறு இடம் பெயரும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வழி தவறி குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விடுகிறது. தவிர, தண்ணீர் மற்றும் உணவிற்காகவும் மாற்றுப்பாதையை தேர்வு செய்யும் யானைக் கூட்டங்கள் அங்கே சுற்றி வருகிறது.
அதன்படி, கடந்த 4 மாதங்களாக 3 குட்டிகளுடன் 5 யானைகள் மணலார், மேல் மணலார், வெண்ணியார் போன்ற பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்த யானைக்கூட்டம் குடியிருப்புகளையும், வாகனங்கள் மற்றும் மின்கம்பங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
இதனால் யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட சின்னமனூர் வனச்சரகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.