முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
அணிவகுப்பில் மயங்கிய மாணவி உயிரிழப்பு: கல்லூரியை உறவினா்கள் முற்றுகை
By DIN | Published On : 19th March 2022 10:59 PM | Last Updated : 19th March 2022 10:59 PM | அ+அ அ- |

பெரியகுளத்தில் பெண்கள் கல்லூரியில் அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு உறவினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில், கல்லூரி விளையாட்டு நாள் சனிக்கிழமை நடைபெற இருந்தது. போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கான ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லுப்பட்டியை சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஜெனிலியா பங்கேற்றாா். அணிவகுப்பின் போது மாணவி ஜெனிலியா திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டாா். உடனே அவரை மீட்டு பெரியகுளத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
மாணவியின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை இரவு கல்லூரியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.