முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் அதிகாரிகளை கண்காணிக்க கேரளம் சார்பில் காவலர்கள் நியமனம்

முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக படகு மூலம் செல்லும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்காணிக்க தேக்கடி படகு துறையில் கேரள காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக படகு மூலம் செல்லும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்காணிக்க தேக்கடி படகு துறையில் கேரள காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணைக்கென்று தனி காவல் நிலையம் அமைக்கப்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செயல்படுகிறது.

இந்த காவல் நிலையத்தில் ஒரு டிஎஸ்பி, ஒரு ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள், இன்ஸ்பெக்டர் மற்றும் 18 காவலர்களை கேரள அரசு நியமித்து, அங்கு பணியாற்றி வருகின்றனர்.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி அணைப் பகுதியில் அனுமதியின்றி ஓய்வு பெற்ற கேரள மற்றும் தில்லி காவல்துறையினர் சுற்றிப்பார்த்தனர்.

இதுபற்றி தமிழக பத்திரிகைகள் செய்தி வெளியானவுடன் பெரியாறு அணை டி.எஸ்பி.நந்தன் பிள்ளை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதேபோல் புலிகள் காப்பகமும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் தேக்கடி படகு துறையில் தமிழக பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் பெரியாறு அணைப் பகுதிக்கு வேலைக்கு செல்வதை கண்காணிக்க 1 சார்பு ஆய்வாளர், 4 காவலர்கள் என 5 பேர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழக படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் அலுவலர், தொழிலாளர்கள் சோதனை செய்து அதன் பின்னர் அனுப்புவர்.

கேரள அரசின் இந்த புதிய நடைமுறையால் முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவற்றை பெரியாறு, வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கம் கண்டித்துள்ளது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் பொன்.காட்சி கண்ணன் கூறும்போது, 

"முல்லைப் பெரியாறு அணையில் டி.எஸ்.பி. தலைமையிலான காவல் நிலையம் உருவாக்கப்பட்டது முதல் அணையில் தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.

தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அணைப்பகுதியில் பராமரிப்பு வேலைகளுக்கு செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை. தற்போது தேக்கடி படகு துறையில் எப்போதும் இல்லாத அளவிற்கு கேரள காவல்துறையினர் நியமிக்கப்பட்டு தமிழக அதிகாரிகளை அணையில் பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்குடன் சோதனை செய்வது அனைத்து உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கையாகும்,

தமிழக முதல்வர் உடனடியாக கேரள முதல்வருடன் பேச வேண்டும். கம்பம், பள்ளத்தாக்கு உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளை போராட்டம் நடத்த உள்ளனர். கொந்தளிப்பை போக்க வேண்டும்" என்றார்.

முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தமட்டில் கடந்த 3 மாதங்களாக கேரள அரசு தொடர்ந்து தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு இடையூறு செய்து வருகிறது. இந்த நிலை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com