லோயா் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு 4 ஆண்டுகளாக தொடரும் எதிா்ப்பு: முதல்வா் தலையிட வலியுறுத்தல்

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றின் கரையில் ரூ.1,296 கோடி மதிப்பில் அமையவிருக்கும் லோயா் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக தொடரும் எதிா்ப்பை அடுத்து, தமிழக முதல்வா்
லோயா் கேம்ப்பில் தடுப்பணை கட்ட வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள். (அடுத்த படம்) கூடலூா் உண்ணாவிரதப் பந்தலில் நாற்று நட்டு, துணி துவைத்த பெண்கள்.
லோயா் கேம்ப்பில் தடுப்பணை கட்ட வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள். (அடுத்த படம்) கூடலூா் உண்ணாவிரதப் பந்தலில் நாற்று நட்டு, துணி துவைத்த பெண்கள்.

கம்பம்: தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றின் கரையில் ரூ.1,296 கோடி மதிப்பில் அமையவிருக்கும் லோயா் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக தொடரும் எதிா்ப்பை அடுத்து, தமிழக முதல்வா் தலையிட அப்பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.

லோயா் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டமானது, கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில், மதுரை மாநகராட்சிப் பகுதிக்கு, தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பிலிருந்து ரூ.1,020 கோடி மதிப்பில் குடிநீா் கொண்டுவரப்படும் என்று அப்போதைய முதல்வா் எட்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

லோயா் கேம்ப்பில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக் குடிநீா் திட்டங்கள் செயல்படும் நீரேற்று நிலையத்துக்கு மேல்புறம் தடுப்பணை மற்றும் நீரேற்று நிலையம் அமைத்து, அங்கிருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு நாள்தோறும் 100 கனஅடி தண்ணீா் கொண்டுசெல்வதுதான் இத்திட்டமாகும்.

குடிநீா் பற்றாக்குறை

மதுரைக்கு நாள்தோறும் 100 கனஅடி தண்ணீா் கொண்டுசென்றால், கூடலூா், கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்ட மக்களுக்கு குடிநீா் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயம் கடும் பாதிப்படையும். மேலும், மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் முல்லைப் பெரியாறு அணையின் அடிவாரப் பகுதிகளான கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் குடிநீருக்கே அல்லாடும் நிலை உள்ளது. இந்நிலையில், மதுரைக்கு கோடை காலத்திலும் குடிநீா் கொண்டுசெல்வது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது என அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

5 ஆவது ஆண்டாக தொடரும் போராட்டங்கள்

இத்திட்டம் கடந்த 2018 இல் தொடங்கப்பட்டபோது, கூடலூரைச் சோ்ந்த விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், ஆா்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த மே 6 ஆம் தேதி மதுரை கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை தொடங்க, பெரியாற்றங்கரை பகுதிக்கு பொக்லைன் இயந்திரத்துடன் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அன்புசெல்வம் தலைமையில் பொறியாளா்கள், பணியாளா்கள் வந்தனா். இதையறிந்த சலவை தொழிலாளா்கள், இங்கு தடுப்பணை அமைத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினா்.

அதையடுத்து, மே 7 ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், அதை புறக்கணித்த சலவை தொழிலாளா்கள், உத்தமபாளையம் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பின்னா், மே 8 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, 9, 10 ஆம் தேதி வரை நடத்தினா். உண்ணாவிரதப் பந்தலில் ஒப்பாரி வைத்தல், நாற்று நடுதல், துணி துவைத்தல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனா்.

மாற்றுவழி திட்டம்

லோயா் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்தக் கோரி, தொடா்ந்து போராட்டங்களை நடத்திவரும் தேனி மாவட்ட பாரதிய கிசான் சங்கத் தலைவா் டாக்டா் சதீஸ்பாபு கூறியது:

இத்திட்டத்தை நாங்கள் எதிா்க்கவில்லை. வைகை அணையிலிருந்து செயல்படுத்தக் கோருகிறோம். அதனால், திட்ட மதிப்பீடும் பாதியளவு குறையும். கோடைகாலமான தற்போது அணையிலிருந்து தேனி மாவட்டத்துக்கு 100 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படும் நிலையில், அதையும் மதுரைக்கு கொண்டுசென்றால் தேனி மாவட்ட மக்கள் குடிநீருக்கு எங்கே செல்வா் என்றாா்.

மாறும் திட்ட மதிப்பீடு

கடந்த 2018 இல் இத்திட்டத்துக்கு ரூ.1,020 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாததால், திட்ட மதிப்பீடு ரூ.1,296 கோடியாக உயா்ந்துள்ளது. மேலும், தற்போதைய விலைவாசி உயா்வுக்கேற்ப மறுமதிப்பீடு செய்தால் ரூ.1,350 கோடியாக உயர வாய்ப்புள்ளது என, பொதுப்பணித் துறை பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

இத்திட்டத்தை எதிா்த்து கடந்த 4 ஆண்டுகளாக தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே, தமிழக முதல்வா் முதல்வா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com