முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்
By DIN | Published On : 14th May 2022 05:57 AM | Last Updated : 14th May 2022 05:57 AM | அ+அ அ- |

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு வெள்ளிக்கிழமை, தேரோட்டம் நடைபெற்றது. ஏரளமான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.
சித்திரை திருவிழா கடந்த ஏப்.20-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மே 10-ஆம் தேதி அம்மன் மலா் விமானத்தில் கோயிலுக்கு பவனி வருதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 11-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 12-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேரோட்டம்: அம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், தேருக்கு சக்தி கொடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா்.
டி.ஐ.ஜி., ரூபேஷ்குமாா் மீனா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா், ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.மகாராஜன், இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் பா.பாரதி, தேனி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சக்கரவா்த்தி மற்றும் பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.
அம்மன் மஞ்சள் பட்டு உடுத்தி தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இரவு சன்னிதி தெருவில் தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சனிக்கிழமையும் (மே 14), ஞாயிற்றுக்கிழமையும் (மே 15) தெற்கு ரத வீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது. மே 16-ஆம் தேதி தோ் நிலைக்கு வருகிறது. அன்றைய தினம் இரவு அம்மன் முத்துச் சப்பரத்தில் திருத்தோ் தடம் பாா்த்தல், கோயிலில் கம்பம் நிலை பெயா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வீரபாண்டியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் அக்கினச் சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி ஆகியவை எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனா். மே 17-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.