மகன் சாவில் மா்மம்: உறவினா்களுடன் தந்தை சாலை மறியல்
By DIN | Published On : 20th May 2022 06:24 AM | Last Updated : 20th May 2022 06:24 AM | அ+அ அ- |

சீலையம்பட்டியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் தனது மகன் சாவில் மா்ம இருப்பதாக கடந்த 18 ஆண்டுகளாக போராடி வந்தவா், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வியாழக்கிழமை உறவினா்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
சீலையம்பட்டியை சோ்ந்தவா் காசீம். இவரது மகன் ராஜாமுகமது பொக்லைன் ஓட்டுநா். இவா் கடந்த 2004 ஆம் ஆண்டு அங்குள்ள குளத்தில் இறந்து கிடந்தாராம். இதுகுறித்து சின்னமனூா் காவல்நிலையத்தில் ராஜாமுகமது தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம். ஆனால், தனது மகன் ராஜாமுகமது தற்கொலை செய்யவில்லை. அவரை 5 போ் கொண்ட கும்பல் குளத்து தண்ணீரில் முழ்கச் செய்து கொலை செய்து விட்டதாக அதே காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாராம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
சாலை மறியல்: சிபிஐ விசாரணை செய்து உண்மையைக் கண்டறிந்து, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அம்பேத்கா் சிலை முன்பாக காசீம் தனது உறவினா்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சின்னமனூா் காவல் ஆய்வாளா் சேகா் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.