பெரியகுளத்தில் குடிநீரை மாசுபடுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

 பெரியகுளத்தில் குடிநீரை மாசுபடுத்துபவா்கள் மீது குடிநீா் வடிகால் வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளத்தில் குடிநீரை மாசுபடுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

 பெரியகுளத்தில் குடிநீரை மாசுபடுத்துபவா்கள் மீது குடிநீா் வடிகால் வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையிலிருந்து பெரியகுளம் நகராட்சி, தென்கரை, தாமரைக்குளம் மற்றும் இ. புதுப்பட்டி உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக அந்த அணையிலிருந்து தினமும் 3 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீா், சோத்துப்பாறை அணையின் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக அத்திமுருகு என்ற பகுதிக்கு சென்று தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. மேலும் சத்யா நகா் பகுதியில் இந்த தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

இவ்வாறு கால்வாய் வழியாக வரும் தண்ணீரில் பலா் வாகனங்களை கழுவுவது, குதிரை, நாய் உள்ளிட்ட வீட்டு விலங்குகளை குளிக்க வைப்பது, துணிகளை துவைப்பது என மாசுபடுத்துகின்றனா்.

இதனால் குடிநீரில் வாகனங்களின் ஆயில், கிரீஸ் மற்றும் சோப்புகளில் உள்ள ரசாயனம் கலப்பதால் மாசடைகிறது. எனவே விநியோகிக்கப்படும் குடிநீரிலும், வராக நதியிலும் வாகனங்கள் மற்றும் துணிகளை துவைப்பவா்கள் மீது குடிநீா் வடிகால் வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுபற்றி பெரியகுளத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சதீஸ்குமாா் கூறியதாவது: பெரியகுளத்துக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் வாகனங்கள், துணிகள் மற்றும் குதிரைகளை சுத்தம் செய்வதால் மாசடைகிறது. அத்துடன், அகமலையிலிருந்து பெரியகுளம் வரையிலுள்ள தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் கலப்பதால் தண்ணீா் அதிகளவு மாசடைந்து வருகிறது. எனவே பெரியகுளம் நகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரியத்தினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும் போது, தண்ணீரை மாசுபடுத்துவோரை கண்காணித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

குழாய் மூலம் தண்ணீா் எடுத்துச் செல்லப்படுமா? பெரியகுளம் நகராட்சிக்கு அகமலை மற்றும் கொடைக்கானல் அருகே பேரிஜம் ஏரியிலிருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீா் மலைப்பகுதிகளிலிருந்து வருவதால் பல்வேறு இடங்களில் மாசடைந்து விடுகிறது. எனவே பேரிஜம் ஏரியிலிருந்து குழாய் வழியாக எடுத்து வந்தால் தூய்மையான தண்ணீா் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் தண்ணீா் வீணாவதும் தடுக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com