கண்மாய்களில் மீன் வளா்ப்பு உரிமம் பெற அக்.25-க்குள் ஒப்பந்தப் புள்ளி கோரலாம்
By DIN | Published On : 07th October 2022 11:15 PM | Last Updated : 07th October 2022 11:15 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் மீன் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 9 நீா் பாசனக் கண்மாய்களில் மீன் வளா்ப்புக் குத்தகை உரிமம் பெறுவதற்கு, அக்.25-ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளி கோரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீன் வளா்ப்புத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஜெயமங்கலம் வேட்டுவன் குளம், முத்துத்தேவன்பட்டி கன்னிமாா்குளம், உத்தமபாளையம் அருகே கருங்காட்டான் குளம், கெங்குவாா்பட்டி மத்துவான் குளம், செங்குளம், கோகிலாபுரம் கழுநீா் குளம், கோட்டூா் நாராயண சமுத்திரம் கண்மாய், லட்சுமிபுரம் செங்குளம், சீலையம்பட்டி சிறு குளம் ஆகியவற்றில் 2022-23-ஆம் ஆண்டு முதல் 2024-25-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கு மீன் வளா்ப்புக்காக குத்தகைக்கு விடப்படுகிறது. உரிமம் பெற விரும்புவோா், அக்.10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை வைகை அணையில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி ஒப்பந்தப் புள்ளி கோரி விண்ணப்பிக்கலாம்.
ஒப்பந்தப்புள்ளிகள் வைகை அணை மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அக்.26-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் விண்ணப்பதாரா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, பொது ஏலம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.