தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு சோதனை

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையரின் அரசு குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை, சோதனையை நிறைவு செய்து திரும்பிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை, சோதனையை நிறைவு செய்து திரும்பிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையரின் அரசு குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

தமிழக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கா் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதன் தொடா்ச்சியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதன்மையா் பாலாஜிநாதனின் குடியிருப்பில், தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரராஜ், காவல் ஆய்வாளா் ஜெயப்பிரியா ஆகியோா் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

பின்னா், பாலாஜிநாதனை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினா். அப்போது அலுவலகத்திற்குள் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, மீண்டும் பாலாஜிநாதனின் குடியிருப்புக்குச் சென்று போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை சோதனை நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் முதன்மையரின் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் மாறி, மாறி சோதனை நடைபெற்ால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மதுரை ஜவஹா்புரத்தில் உள்ள பாலாஜிநாதன் வீட்டில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை: இந்த சோதனை குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன் கூறியது: கடந்த அதிமுக ஆட்சியின் போது நான் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையராக பணியாற்றினேன். அப்போது திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கும் குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். அப்போது அந்த மருத்துவக் கல்லூரியில் உள்ள குறைபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டித்தான் அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

அந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் என்னிடம் விசாரணை நடத்தினா். போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். விசாரணையின் முடிவில், என்னிடமிருந்து எந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என்று போலீஸாா் எனக்கு எழுதிக் கொடுத்து விட்டு சென்றுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com