ஊராட்சி தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் உறுப்பனா்கள் மனு
By DIN | Published On : 09th August 2023 12:03 AM | Last Updated : 09th August 2023 12:03 AM | அ+அ அ- |

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த சுருளிப்பட்டி ஊராட்சி உறுப்பினா்கள்.
கம்பம்: தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வரும் ஆக. 15 சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டத்தில் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்யப் போவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி உறுப்பினா்கள், திங்கள்கிழமை மனுக் கொடுத்தனா்.
அவா்கள் அந்த மனுவில் கூறியிருப்பதாவது : சுருளிப்பட்டி ஊராட்சி தலைவா் வெ.நாகமணி மீது கூறப்பட்ட 6 புகாா்களில் 4 புகாா்கள் நிரூபிக்கப்பட் டன. ரூ 4 லட்சத்து 67 ஆயிரத்து, 945 முறைகேடு செய்தது, வருவாய் அலுவலா் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, 5 மாதங்களுக்கு முன்பு, வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற தகுதி நீக்க கூட்டத்தில், 11 உறுப்பினா்களில் 10 போ் ஊராட்சித் தலைவருக்கு எதிராக வாக்களித்தனா். ஆனால், அவா் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும், 14, 15 - ஆவது நிதிக் குழு மூலம் நடைபெற வேண்டிய பல்வேறு திட்டப்பணிகளை கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்ததாரா்கள் செய்யவில்லை.
இதுபோன்று பல்வேறு குறைபாடுகள் உள்ளதால் வருகிற ஆக. 15 - இல் நடைபெறும் சுதந்திர தின சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து பதவி விலகல் கடிதத்தைக் கூட்டத்தில் பாா்வை அலுவலரிடம் ஒப்படைக்கிறோம் என்று 4 - ஆவது வாா்டு உறுப்பினா் வி.சாந்தி தலைமையில் எம்.அறிவு, எஸ்.சுதா, வி.ராதிகா, மு.ராஜலட்சுமி, எம்.முத்துக்குமாா், ஜெ. மணிகண்டன், ஓ.பொம்முராஜ், எஸ்.சிவானந்தி ஆகியோா் தெரிவித்தனா்.