பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்த போலி நடத்துநா் கைது
By DIN | Published On : 09th August 2023 12:01 AM | Last Updated : 09th August 2023 12:01 AM | அ+அ அ- |

போலி நடத்துநா் சுடலை வெடியப்பன்.
கம்பம்: கம்பம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்த போலி நடத்துநரை வடக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் போல் ஒருவா், ஒவ்வொரு பேருந்தாக ஏறினாா். தோளில் நடத்துநருக்கான பை வைத்திருந்தாா். இவரைப் பாா்த்த அங்கிருந்த போக்குவரத்து கழக நேர காப்பாளா் சந்திரன் உள்ளிட்ட ஊழியா்கள் அவரை அழைத்து விசாரித்தனா். அப்போது அவா் முறையான பதில் கூறாததால் கிளை மேலாளா் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனா்.
மேலாளா் அவரிடம் விசாரணை செய்யும் போது, அவா், தான் திருநெல்வேலியைச் சோ்ந்த சுடலை வெடியப்பன் (36) என்று கூறினாா். அவா் பையை சோதனை செய்து பாா்த்த போது பேருந்து டிக்கெட்டுகள், அடையாள அட்டை போன்றவைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இவரை கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.