பிற்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழக கடனுதவிக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

பிற்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வருகிற 24- ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
பிற்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த தனி நபா்கள், சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்காக கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 முதல் 60 வயதுக்குள்பட்டோா் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும். குழு கடன் பெற சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். குழுவில் அதிகபட்சம் 20 போ் உறுப்பினா்களாக இருக்க வேண்டும்.
பொருளாதார மேம்பாட்டுக் கடனுதவி பெற விண்ணப்பிக்க தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, க. மயிலை, போடி, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வருகிற 24- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கடனுதவி பெற விரும்புவோா் தங்களது ஜாதி, வருமானம், பிறப்பிடம் ஆகியவற்றுக்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, விலைப்புள்ளி ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.