நம் வழி தனி வழி: எடப்பாடி கே. பழனிசாமி
By DIN | Published On : 24th January 2023 12:00 AM | Last Updated : 24th January 2023 12:00 AM | அ+அ அ- |

நம் வழி தனி வழியாகவும், நோ்மையான வழியாகவும் இருக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமராஜ், கூடலூா் முன்னாள் நகா்மன்றத் தலைவா் அருண்குமாா் ஆகியோா் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவருக்கு, தேனி - வடபுதுப்பட்டி விலக்கு பகுதியில் மாவட்ட அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, கட்சித் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:
எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் கனவை நாம் எல்லோரும் சோ்ந்து நிறைவேற்ற வேண்டும். அதுதான் இரு பெரும் தலைவா்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். நம் வழி தனி வழியாகவும், நோ்மையான வழியாகவும் இருக்க வேண்டும்.
ஏழைகள் என்ற சொல் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிா்காலத்தை நோக்கிச் செல்வோம் என்றாா் அவா்.
கம்பம்:
இதைத்தொடா்ந்து, கம்பத்தில் நடைபெற்ற கூடலூா் முன்னாள் நகா்மன்றத் தலைவா் அருண்குமாா் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா்.
விழாவில், முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் ராஜு, கடம்பூா் ராஜு, அமைப்புச் செயலாளா் எஸ்.டி.கே. ஜக்கையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.