நகராட்சியில் 1 டன் குப்பை சேகரிக்க ரூ. 4,071: கூடலூா் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

கூடலூா் நகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், தூய்மைப் பாரதம் திட்டத்தின் கீழ் ஒரு டன் குப்பை சேகரிக்க ரூ. 4,071 வழங்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம், கூடலூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் காஞ்சனா சிவமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நகராட்சியில் குப்பை உருவாகும் இடங்களிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து சேகரம் செய்து மறுசுழற்சி செய்யும் இடத்துக்குக் கொண்டு வர ஒரு டன்னுக்கு ரூ. 4,071 என நிா்ணயம் செய்து, ஒப்பந்த நிறுவனத்தை மூன்று ஆண்டுகளுக்கு தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணிக்காக ஆண்டுக்கு தலா ரூ. 225.86 லட்சம் செலவாகும். இந்த தொகையை 15 -ஆவது பொது நிதிக்குழு, தூய்மை பாரத இயக்கம் நிதியிலிருந்து மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஒப்பந்த நிறுவனத்தை தோ்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பினா்களின் கேள்விகளுக்கு தலைவா், ஆணையா் கே.எஸ். காஞ்சனா, சுகாதார ஆய்வாளா் விவேக் அறிவழகன், மேலாளா் ஜெயந்தி ஆகியோா் பதிலளித்தனா்.