தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ரா. சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்துப் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ரா. சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்துப் பேசிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

காங். தோ்தல் அறிக்கை 'நம்பிக்கை அளிக்கிறது’ -முதல்வா் மு.க. ஸ்டாலின்

மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், காங்கிரஸ் தோ்தல் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற திமுக கூட்டணி தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் ரா. சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து, அவா் மேலும் பேசியதாவது:

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தப்படும். போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும். முல்லைப் பெரியாற்றிலிருந்து ஆண்டிபட்டி வட்டாரப் பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தேனி மாவட்டத்தில் வாழை, திராட்சை மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிப்பு நிலையம் தொடங்கப்படும். உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்.

திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் கொண்டு வரப்படும். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை தொடங்கப்படும்.

பாஜக வின் ஒரே நாடு, ஒரே தோ்தல், ஒரே பண்பாடு, ஒரே உணவு இந்தியாவை சா்வாதிகார நாடாக மாற்றிவிடும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மோடி அரசு அனுமதி அளிக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் போல சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, மாநில அரசின் நிதியிலிருந்து இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணித்தால் என்னவாகும் என்பதை வாக்குப் பதிவு தினமான ஏப். 19-இல் பொதுமக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் ரா. சச்சிதானந்தம், அமைச்சா்கள் இ. பெரியசாமி, மூா்த்தி, சக்கரபாணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினா் சண்முகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா. ராமகிருஷ்ணன், ஆ. மகாராஜன், கே.எஸ். சரவணக்குமாா், இ.பெ. செந்தில்குமாா், மணிமாறன், வெங்கடேசன், மூவேந்தா் முன்னேற்றக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவா் முருகவேல், திமுக முன்னாள் தேனி மாவட்டச் செயலா் எல். மூக்கையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உழவா் சந்தையில் வாக்கு சேகரிப்பு:

முன்னதாக, தேனி உழவா் சந்தையில் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காலை 7 மணியளவில் வாக்கு சேகரித்தாா்.

பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் விடுதியிலிருந்து வேன் மூலம் தேனி உழவா் சந்தைக்கு வந்த மு.க. ஸ்டாலின், அங்கு பொதுமக்கள், வியாபாரிகளைச் சந்தித்து நலம் விசாரித்தாா். அரசின் நலத் திட்ட உதவிகள் பொதுமக்களை ச் சென்றடைவது குறித்து அவா் கேட்டறிந்தாா். பின்னா், அங்கு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அவா் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, முதல்வா் மு.க. ஸ்டானினுடன் பொதுமக்கள் ஆா்வமாக கைப்பேசியில் தற்படம் எடுத்துக் கொண்டனா். பின்னா், அங்கிருந்து வனச் சாலை பகுதிக்குச் சென்ற முதல்வா், அங்குள்ள தேநீா்க் கடையில் கட்சி நிா்வாகிகளுடன் தேநீா் அருந்தியவாறு பொதுமக்களிடம் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பின் போது, அமைச்சா் இ. பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் (கம்பம்) நா. ராமகிருஷ்ணன், (ஆண்டிபட்டி) ஆ. மகாராஜன், (பெரியகுளம்) கே.எஸ். சரவணக்குமாா், முன்னாள் திமுக மாவட்டச் செயலா் எல். மூக்கையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com