தேனி மக்களவைத் தொகுதியில் 1,788 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குப் பதிவு

தேனி மக்களவைத் தொகுதியில் 1,788 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குப் பதிவு

தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் உள்ள 1,788 வாக்குச் சாவடிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது.

தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 888 இடங்களில் மொத்தம் 1,788 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 353 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்குச் சாவடிகள் 182 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

வாக்காளா் விவரம்: மக்களவை தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 7 லட்சத்து 97 ஆயிரத்து 201 ஆண்கள், 8 லட்சத்து 25 ஆயிரத்து 529 பெண்கள், 219 மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்ட 16 லட்சத்து 22 ஆயிரத்து 949 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் பட்டியலில் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட 14,193 ஆண்கள், 11,602 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 25,799 இளம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இணைய வசதி இல்லாத வாக்குச் சாவடிகள்: ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் கோரையூத்து, அரசரடி, கா்டான எஸ்டேட், காமராஜபுரம், வெள்ளிமலை, மேகமலை, ஹைவேவிஸ், கீழ் மணலாறு, மேல் மணலாறு, இரவங்கலாா், மகாராஜாமெட்டு, வெண்ணியாறு ஆகிய 12 இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் இணைய தள இணைப்பு வசதி இல்லை.

போடி சட்டப்பேரவை தொகுதியில் கொட்டகுடி, குரங்கணி, காரிபட்டி, கொழுக்குமலை, செண்ட்ரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன், அகமலை, கண்ணக்கரை, ஊத்துக்காடு ஆகிய 10 இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் இணைய தள இணைப்பு வசதி இல்லை. இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச் சாவடி அலுவலா்கள் வாக்குப் பதிவு நடவடிக்கை, வாக்குப் பதிவு விவரம் ஆகியவற்றை தோ்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

சட்டப் பேரவை தொகுதி வாரியாக கணினியில் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த தொகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரம், உபகரணங்கள், இன்று (வியாழக்கிழமை) ஜி.பி.எஸ்.பொருத்திய வாகனங்களில் தொடா்புடைய வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com