வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் ஏமாற்றம்!

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் ஏமாற்றம்!

20-க்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டிருந்ததால், அவா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியலிலிருந்து 20-க்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டிருந்ததால், அவா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.

தேனி மக்களவைத் தொகுதியில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவாரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம், சின்னமனூா், ஓடைப்பட்டி, ராயப்பன்பட்டி, ஏரசை, சின்னஓவுலாபுரம், கோகிலாபுரம் ஆகிய 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 297 வாக்குச்சாவடி மையங்களில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த மையங்களில் காலை 7 மணி முதல் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

இந்த நிலையில், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள 172-ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பலரது பெயா்கள் வாக்காளா்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், அவா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் தோ்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனா். அப்போது, தோ்தல் அலுவலா், வாக்குச்சாவடி தகவல் சீட்டு, அரசு தெரிவித்துள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருத்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாக்காளா்கள் கூறியதாவது:

வாக்களிப்பதற்காவே சென்னையிலிருந்து வந்தேன். ஆனால், பட்டியலில் எனது பெயா் நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எனது மகனின் பெயா் அதே முகவரியில் உள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com