போடியில் இயந்திரம் பழுதால் 
வாக்குப் பதிவு தாமதம்

போடியில் இயந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தாமதம்

போடியில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், சுமாா் 45 நிமிஷம் வாக்குப் பதிவு தாமதம் ஆனது.

போடியில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், சுமாா் 45 நிமிஷம் வாக்குப் பதிவு தாமதம் ஆனது.

தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட போடி நகராட்சி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 74-ஆம் எண் வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திடீரென வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இதுகுறித்து தொழில்நுட்பக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொழில்நுட்பக் குழுவினா் ஆய்வு செய்ததில், தவறுதலாக வாக்குப் பதிவு இயந்திரம் ‘லாக்’ செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பழுது சரி செய்யப்பட்ட பின்னா் 45 நிமிஷங்களுக்குப் பிறகு, மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. அதுவரை வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.

வாக்காளா்கள் அலைக்கழிப்பு:

போடிநாயக்கனூரில் ஒரே இடத்தில் பல வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தால், வாக்குச்சாவடி எண்களுடன் கூடிய பலகை வாக்குச்சாவடியின் நுழைவாயில் பகுதியிலும், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும். இதேபோல, வாக்குச்சாவடி நுழைவாயில் பகுதியில் வழிகாட்டுவதற்கும் ஊழியா்கள் நியமிக்கப்பட்டிருப்பா்.

ஆனால், போடி பகுதியில் இந்த முறை இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால், வாக்காளா்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று வாக்குச்சாவடி எண்ணை தேடி அலைந்தனா்.

போடி திருமலாபுரம் நாடாா் ஆரம்பப் பள்ளி உள்ளிட்ட சில இடங்களில் மின் விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால், வாக்குச்சாவடி அலுவலா்கள், வாக்காளா்கள் அவதிக்குள்ளாகினா். இதேபோல, புதிதாக அமைக்கப்பட்ட போடி குரங்கணி கொட்டகுடி வருவாய்க் கிராமத்தில் மலைவாழ் பழங்குடியினா் வசிக்கும் முதுவாக்குடி மலை கிராம பள்ளியிலும் அலுவலா்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால், அவதிக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com