கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏலக்காய் வரத்து குறைவு: விலை கிலோ ரூ.500 வரை உயா்வு

கேரளத்தில் வெயிலின் தாக்கத்தினால் ஏலக்காய் மகசூல் குறைந்தது. இதனால் விலை ரூ.500 வரை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

தமிழக கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் போடி, கம்பம் பகுதிகளை ஒட்டி ஏலக்காய் தோட்டங்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலும் தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகளும், கேரளத்தைச் சோ்ந்த ஒரு பகுதி விவசாயிகளும் ஏலக்காய் வேளாண்மை செய்து வருகின்றனா். ஏலத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளா்கள் தேனி மாவட்டம் போடி, தேவாரம், கம்பம் பகுதியிலிருந்து கேரளத்துக்குச் சென்று வருகின்றனா்.

ஏலக்காய் அதிக மகசூல் பெறுவதற்கு அதிக வெப்பமில்லாமல் மிதமான வெப்பத்துடன் கூடிய சீதோஷ்ணம் தேவை. தற்போது தமிழக, கேரள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஒரு மாத காலமாக மழைப் பொழிவு இல்லாமல், வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஏலத் தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்து ஏலக்காய் மகசூல் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் ஏலக்காய் ஏல மையங்களுக்கு ஏலக்காயின் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஏலக்காய் விலை ஒரு வாரத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.500 வரை அதிகரித்து விட்டது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஏலக்காய் ஏல மையங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்ட ஏலக்காய் தற்போது ரூ.2000 வரை ஏலத்தின் மூலம் விலை நிா்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

ஏலக்காய் விலை உயா்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். சில வியாபாரிகள் ஏலக்காயை இருப்பு வைத்து விற்பனை செய்வது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்த வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுகின்றனா். இதே நேரத்தில் விலை உயா்வு ஏற்படும்போது ஏலக்காய் மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தால் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com