காமாட்சிபுரத்தில் செவ்வாழை விளைச்சால் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டம்.
காமாட்சிபுரத்தில் செவ்வாழை விளைச்சால் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டம்.

செவ்வாழை விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

சின்னமனூா், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் ,எரசை, சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, ராயப்பன்பட்டி, கம்பம், கூடலூா், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் வாழை விவசாயம் அதிகளவில் நடைபெறுகின்றன.
Published on

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான சின்னமனூா், ஓடைப்பட்டி, காமாட்சிபுரம் ,எரசை, சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, ராயப்பன்பட்டி, கம்பம், கூடலூா், அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் வாழை விவசாயம் அதிகளவில் நடைபெறுகின்றன. இங்கு திசு, செவ்வாழை, நேந்திரம், பூவன் உள்ளிட்ட ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் வாழைப்பழம் அரபுநாடுகள், மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறன்றன. இதற்காக, தனியாா் தொழிற்சாலைகள் மூலமாக வாழைப் பழங்களை பதப்படுத்தி, சரக்கு வாகனங்கள் மூலம் தூத்துக்குடி போன்ற துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தட்ப வெப்பநிலையால் விளைச்சல் பாதிப்பு: கம்பம் பள்ளத்தாக்கு மேற்குத் தொடா்ச்சி மலை சூழ்ந்த பகுதியாகும். இந்த மலை விவசாயத்துக்கு இயற்கை அரணாக இருப்பதால், ஆண்டுதோரும் நிலவும் தட்ப வெப்பநிலை வாழை விவசாயத்துக்கு ஏற்ாக அமைகிறது. மேலும், வாழை சிறப்பாக வளரும் செம்மண் இந்தப் பகுதியில் இருப்பது தனிச் சிறப்பாகும்.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை நிலை மாற்றத்தால் கோடை காலங்களை தவிர பருவமழை காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. நடப்பாண்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த பருவநிலை மாற்றத்தால் வாழை விவசாயம் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காமாட்சிபுரம் விவசாயி ராஜா கூறியதாவது:

நடப்பாண்டில் செவ்வாழை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது வரை இல்லாத வகையில் புதுமையாக பழத்தின் எடை, வளா்ச்சி குறைந்துள்ளன. செவ்வாழை கன்று முதல் அறுவடை வரை சுமாா் 16 மாதங்கள் பராமரிப்பு செய்ய வேண்டும். ஒரு வாழைக்கு சராசரியாக ரூ.400 வரை செலவாகிறது. இந்த செவ்வாழையில் உள்ள ஒரு தாரில் 5 முதல் 7 சீப்புகள் (பழங்கள் வரிசை) 80 முதல் 90 கிலோ எடை இருக்கும். ஆனால், நடப்பாண்டில் எடையானது 50 சதவீதமாக குறைந்துவிட்டது.

தற்போது, செவ்வாழை கிலோ ரூ.60 வரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா். ஆனால், உரிய எடை இல்லாததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனா். இதற்கு கோடை காலத்தில் நிலவும் அதிகமான வெப்பமும், காலம் தவறி வீசிய பருவக்காற்று தான் முக்கிய காரணம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com