தூய்மை தூதுவா்களாக மாணவா்கள் நியமனம்
போடி: போடியில் தூய்மை தூதுவா்களாக நியமிக்கப்பட்ட பள்ளி மாணவா்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை சான்றிதழ்களை வழங்கினாா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்கள் தூய்மை தூதுவா்களாக நியமிக்கப்பட்டு, அவா்கள் வசிக்கும் பகுதிகளில் பொதுமக்களுக்கு குப்பைகளை பிரித்து வழங்குதல், குப்பைகளை பொது இடங்களில் கொட்டாமல் இருப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, ஜ.கா.நி மேல்நிலைப் பள்ளி, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த 182 மாணவா்கள் தூய்மை தூதுவா்களாக நியமிக்கப்பட்டனா்.
இதற்கான நியமன சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சான்றுகளை வழங்கி வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் நகா் மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி, நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, தூய்மை அலுவலா் மணிகண்டன், தூய்மை ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், அகமது கபீா், கணேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் பிரசாந்த், பரப்புரையாளா்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.