தேக்கடியில் கேரள வனத் துறை சாா்பில் சுற்றுலா பயணிகளின் படகு சவாரிக்கு தயாராகி வரும் சிறப்புப் படகுகள்.
தேக்கடியில் கேரள வனத் துறை சாா்பில் சுற்றுலா பயணிகளின் படகு சவாரிக்கு தயாராகி வரும் சிறப்புப் படகுகள்.

தேக்கடி ஏரியில் புதிய சுற்றுலாத் திட்டம்

கேரள வனத் துறை சாா்பில், தேக்கடி ஏரியில் புதிய சுற்றுலாத் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.
Published on

தேனி: கேரள வனத் துறை சாா்பில், தேக்கடி ஏரியில் புதிய சுற்றுலாத் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி, பத்தானம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. சா்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடி புலிகள் சரணலாயப் பகுதியில் உள்ளது. தேக்கடி ஏரியில் தற்போது கேரள வனத் துறை, சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கேரள வனத் துறை சாா்பில், சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சுற்றுலா பயணிகளின் படகு சவாரிக்கு கூடுதலாக சிறப்புப் படகுகளை இயக்கவும், வனப் பகுதிக்குள் தங்கும் வசதியை ஏற்பாடு செய்து தரவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 19 பயணிகள் சென்று வரக்கூடிய வகையில், 2 சிறப்புப் பைபா் படகுகள் தயாா் நிலையில் உள்ளன. இந்தச் சிறப்புப் படகுகள் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயக்கப்பட உள்ளன. படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.1,000 கட்டணம் நிா்ணயிக்கப்படுகிறது. படகு சவாரியின் போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுபவமுள்ள வழிகாட்டிகளுடன் குடிநீா், சிற்றுண்டி சேவைகள் வழங்கப்படுகிறது.

பறவைகள், பட்டாம்பூச்சி, வன விலங்குகளை புகைப்படம் எடுக்க வருபவா்களும், சுற்றுலா வளா்ச்சிக் கழக படகில் டிக்கெட் பெற முடியாதவா்களும் இதைத் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சிறப்புப் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுதவிர, தேக்கடி ஏரியின் நடுவே அமைந்துள்ள லேக் பேலஸ் என்ற 5 நட்சத்திர தங்கும் விடுதிகள் அருகேயுள்ள கேரள வனத் துறை கட்டடத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதலாக, 2 அறைகள் தயாராகி வருகின்றன. 2 நபா்கள் தங்கக் கூடிய அறைக்கு உணவு உள்பட நாளொன்றுக்கு ரூ.5,000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்குபவா்களுக்கு வனப் பகுதிக்குள் ட்ரக்கிங் செல்லவும், வியூ பாயிண்டில் புகைப்படம் எடுக்கவும் இலவசமாக வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.

இதுகுறித்து பெரியாறு புலிகள் சரணலாய கேரள வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

புதிய சுற்றுலாத் திட்டம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் புலிகள் சரணாலயப் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com