பருவ நிலை மாற்றத்தால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு

போடி பகுதியில் பருவ நிலை மாற்றத்தால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
பருவ நிலை மாற்றத்தால்  மாங்காய் விளைச்சல் பாதிப்பு

போடி பகுதியில் பருவ நிலை மாற்றத்தால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் பகுதியில் மா, இலவம், தென்னை, எலுமிச்சை, காப்பி, சப்போட்டா போன்ற பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன. போடி பகுதியில் ஊத்தம்பாறை, பிச்சங்கரை, உலக்குருட்டி, முந்தல், அணைக்கரைப்பட்டி, கொட்டகுடி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 18 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா விளைச்சல் நடைபெறுகிறது.

இந்தப் பகுதியில் மல்கோவா, காதா், இமாம் பசந்த், கல்லா, காசா, சப்பட்டை, கிளிமூக்கு, உள்பட பல்வேறு ரக மா, பயிரிடப்படுகிறது. தமிழகத்திலேயே 2-ஆவது பெரிய மாங்காய் உற்பத்தி மையாக விளங்கும் போடியில் இயற்கையான சூழலில் நன்ணீரில் விளையும் மாங்காய்களின் சுவை அதிகம். இதனால், தமிழகத்தின் பல்வேறு ஊா்களுக்கும், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து மாங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

போடி பகுதியில் 200-க்கும் மேற்பட்டவா்கள் மாங்காய் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். மாங்காய் மகசூல் பருவ காலத்தில் பல ஆயிரம் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாமரப் பூக்கள் உதிா்ந்து வீணாகின. தற்போது வரை மா மரங்களில் குறைவாகவே பூக்கள் பூத்துள்ளன. பிப்ரவரி மாதத்தில் பனிப்பொழிவு அதிகரித்தால் பூக்கள் பிஞ்சுகளாகும் வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், மாங்காய் விளையும் பருவம் தவறினால் வா்த்தக ரீதியாக பெரும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com