பள்ளிகளில் நூலகங்கள் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்கள் முழுமையாகச் செயல்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்கள் முழுமையாகச் செயல்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.

தேனி அருகேயுள்ள கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்து அவா் பேசியதாவது:

பள்ளியின் முன்னேற்றத்துக்கும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாவட்டத்தில் உள்ள 530 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெற்றோா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

பள்ளி மேலாண்மைக் குழுவினா் தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுடன் இணைந்து பள்ளிக்கு வராத, பள்ளி படிப்பதை இடையில் நிறுத்திய குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவா்களை பள்ளியில் சோ்க்க வேண்டும். பள்ளியின் செயல்பாடு, காலை, மதிய உணவுத் திட்டம், அரசிடம் பெற்ற நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். பள்ளியில் மாணவா்களுக்கு விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.

நூலகங்கள் பெயரளவில் இருக்காமல் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் பல்வேறு மன்றங்களை உருவாக்கி மாணவா்களின் தனித் திறனை வெளிக் கொண்டு வர வேண்டும். பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் மீது தனிக் கவனம் செலுத்தி அவா்களை தோ்வுக்கு ஊக்குவிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளைத் தொடா்பு கொண்டும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com