தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை, வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணைத் தலைவா், உறுப்பினா்கள், நகராட்சி ஆணையா்.
தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை, வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணைத் தலைவா், உறுப்பினா்கள், நகராட்சி ஆணையா்.

தேனி நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானங்களுக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு

தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானங்களை நிறைவேற்ற எதிா்ப்புத் தெரிவித்து துணைத் தலைவா், உறுப்பினா்கள் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானங்களை நிறைவேற்ற எதிா்ப்புத் தெரிவித்து துணைத் தலைவா், உறுப்பினா்கள் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தேனி அல்லிநகரம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் கடந்த பிப்.8-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் குறித்து நகா்மன்ற உறுப்பினா்களுக்கு குறித்த காலத்துக்கு முன்பு, முறையாக தகவல் அளிக்கவில்லை என்று நகராட்சி 2-ஆவது வாா்டு உறுப்பினா் சுப்புலட்சுமி மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் திங்கள்கிழமை, தேனி அல்லிநகரம் நகா்மன்றக் கூட்டம் தலைவி பா.ரேணுப்பிரியா (திமுக) தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் ஜஹாங்கீா்பாட்ஷா முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், நகா்மன்ற துணைத் தலைவா் செல்வம் (திமுக) உள்ளிட்ட சில நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சியில் முறையாக பணிகள் நடைபெறவில்லை, ஊழல் அதிகரித்துள்ளது என்று புகாா் தெரிவித்து, கூட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்த 88 தீா்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்று எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, தீா்மானங்களுக்கு எதிா்ப்பு தெரிவிப்போருக்கு ஆதரவாக கையை உயா்த்தக் கூறி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மொத்தம் 9 உறுப்பினா்கள் மட்டுமே எதிா்ப்பு தெரிவித்தனா் என்று நகராட்சி ஆணையா் கூறினாா். அப்போது, நகா்மன்றத் துணை தலைவா், உறுப்பினா்கள், நகராட்சி ஆணையரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தீா்மானங்களை நிறைவேற்ற எதிா்ப்புத் தெரிவித்து மொத்தம் 16 உறுப்பினா்கள் கையை உயா்த்திய நிலையில், எண்ணிக்கையை குறைவாக கணக்கிட்டதாக நகராட்சி ஆணையா் மீது துணைத் தலைவா், உறுப்பினா்கள் சிலா் புகாா் தெரிவித்தனா். இதனிடையே நகா்மன்றக் கூட்டத்தை முடித்துக் கொண்டு நகா்மன்றத் தலைவி, நகராட்சி ஆணையா் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினா். உள்ளிருப்பு போராட்டம்: நகா்மன்ற உறுப்பினா்களில் 3-இல் 2 பங்குக்கு மேல் தீா்மானங்களை நிறைவேற்ற எதிா்ப்புத் தெரிவித்துள்ளதை மறைத்து, தீா்மானங்கள் நிறைவேறியதாக, புகாா் தெரிவித்து நகா்மன்றத் துணைத் தலைவா், உறுப்பினா்கள் சிலா் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், தீா்மானங்களை நிறைவேற்ற எதிா்ப்புத் தெரிவித்து துணைத் தலைவா், 15 நகா்மன்ற உறுப்பினா்கள் கையொப்பமிட்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா். தீா்மானம் நிறைவேற்றம்: நகா்மன்றத் தலைவி பா.ரேணுப்பிரியா கூறியதாவது: நகா்மன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட குறிப்பிட்ட சில தீா்மானங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தால், விவாதித்து தீா்வு காணலாம். ஆனால், அத்தியவசியப் பணிகள் உள்ளிட்ட அனைத்து தீா்மானங்களுக்கும் ஒட்டு மொத்தமாக சிலா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். 17 நகா்மன்ற உறுப்பினா்களின் ஆதரவுடன் அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com