100 ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முடிவு

100 ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முடிவு

உத்தமபாளையம், ஜூலை 10: சின்னமனூா் நகராட்சி சாா்பில் வணிக வளாகம் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை வெட்ட இயற்கை ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த மரத்தை பெயா்த்தெடுத்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூரில் நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகக் கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய வணிக வளாகம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வணிக வளாகம் அமைக்க இடையூறாக இருக்கும் 100 ஆண்டுகள் பழைமையான அரச மரத்தை வனத் துறை அனுமதியுடன் வெட்டி அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தப் பகுதியை சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள் மரத்தை முழுமையாக அகற்றாமல், கட்டுமானத்துக்கு இடையூறாக இருக்கும் மரக் கிளைகளை மட்டுமே அகற்ற வலியுறுத்தினா்.

இந்த நிலையில், புதன்கிழமை மரத்தை முழுமையாக அகற்ற இயந்திரங்களுடன் வந்த பணியாளா்களை இயற்கை ஆா்வலா்கள் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அரச மரத்தை ஒரு மாதத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யத் தேவையான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் நகராட்சியிடம் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று அவா்கள் திரும்பிச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com