மகா சிவராத்திரி: கோயில்களில் விடிய விடிய சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரி: கோயில்களில் விடிய விடிய சிறப்பு வழிபாடு

சிவராத்திரியையொட்டி, தேனி மாவட்டம், போடி, திண்டுக்கல் மாவட்டம், நத்தம், பழனி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெற்றது. மகா சிவராத்திரியையொட்டி, போடி பிச்சங்கரை கீழச் சொக்கநாதா் கோயிலில் சிவலிங்க பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, போடி வினோபாஜி ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். சிவலிங்கப் பெருமானுக்கு 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் சிவராத்திரி நான்கு கால பூஜைகளில் திரளானோா் பங்கேற்றனா். போடி ஜே.கே.பட்டி ஸ்ரீமது காமாட்சியம்மன் கோயில், சிவன் கோயில், குப்பிநாயக்கன்பட்டி குண்டாலீசுவரி கோயில் உள்ளிட்ட குல தெய்வம் கோயில்களில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். நத்தம்: நத்தம் அருகே கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதேபோல, முப்புலிகருப்பு கோயிலில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன. செல்லப்பநாயக்கன்பட்டி குட்டகருப்பு, வேம்பத்தூா் கருப்புசுவாமி, அதியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பழனி: இதேபோல, பழனி அமிா்தகடேசுவரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிவராத்திரியையொட்டி, அமிா்தகடேசுவரா் சமேதா் அமிா்தாம்பிகைக்கு நகையாபரணம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. கோயில் முன் சிறாா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், வேலீஸ்வரா் கோயில், கோதீஸ்வரா் கோயில், அடிவாரம் திருஆவினன்குடி, சண்முகபுரம் சித்தி விநாயகா் ஆகிய கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா். பழனியை அடுத்த கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, 8-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இதில் மருத்துவா்கள் கீதா, சுப்புராஜ், விமல்குமாா், காா்த்திக், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மாலதி பெரியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com