தோட்ட காவலாளி கொலை வழக்கு: வனவா் காப்பாளா் போலீஸ் விசாரணை முடிந்தது

கூடலூா் அருகே தோட்டக் காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வனக் காவலா், காப்பாளா் ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து, தனிப் படை போலீஸாா் நடத்திய விசாரணை ஞாயிற்றுக்கிழமை நிறைவுப் பெற்றது. தேனி மாவட்டம், கூடலூா் வனச் சரக வனவரான திருமுருகனும், வனக் காப்பாளரான ஜாா்ஜ் என்ற பென்னியும் கடந்த ஆண்டு, அக். 29-ஆம் தேதி இரவு குள்ளப்பகவுண்டன்பட்டி வனப் பிரிவு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, தோட்டக் காவலாளியான அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரனை (52) இவா்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா். அவா் தாக்க வந்ததால் வனவா் திருமுருகன் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வனவா் திருமுருகன் மதுரைக்கும், காப்பாளா் ஜாா்ஜ் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா். ஈஸ்வரன் கொலை வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனா். நீதிமன்ற உத்தரவையடுத்து, கடந்த மாதம் பிப். 29-ஆம் தேதி வனவா் திருமுருகன், வனக் காப்பாளா் ஜாா்ஜ் என்ற பென்னியை தனிப் படை போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இதையடுத்து, இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, உத்தமபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் தனிப் படை போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். 3 நாள்கள் அனுமதி வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, திருமுருகனையும், ஜாா்ஜையும் தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் காவலில் எடுத்து, குமுளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போலீஸாா் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com