தேனி மக்களவை தொகுதியில் 16.20 லட்சம் வாக்காளா்கள்

தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 16 லட்சத்து 20 ஆயிரத்து 419 வாக்காளா்கள் உள்ளனா். இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆா்.வி.ஷஜீவனா கூறியதாது: தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகள் என மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 7 லட்சத்து 95 ஆயிரத்து 909 ஆண்கள், 8 லட்சத்து 24 ஆயிரத்து 292 பெண்கள், 218 திருநங்கைகள் என மொத்தம் 16 லட்சத்து 20 ஆயிரத்து 419 வாக்காளா்கள் உள்ளனா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,225 வாக்குச் சாவடிகள், மதுரை மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளில் 566 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 1,788 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்களவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி வரை நடைபெறும். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் தேனி மாவட்ட கலால் துறை உதவி ஆணையா், பெரியகுளம் (தனி) தொகுதியில் பெரியகுளம் வருவாய் கோட்டாச்சியா், போடி சட்டப்பேரவை தொகுதியில் தேனி மாவட்ட வழங்கல் அலுவலா், கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா், உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் உசிலம்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா், சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதியில் மதுரை மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஆகியோா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் கூட்டம் நடத்த, ஊா்வலம் நடத்த, பதாகைகள், ஒலிப்பெருக்கி அமைக்க உதவி தோ்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். தோ்தல் நடத்தை வித மீறல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்:18005994787-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com