மக்களவைத் தோ்தல்: திமுக கூட்டணியில் ‘கை’ மாறிய தேனி தொகுதி

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த தேனி மக்களவைத் தொகுதி, இந்த முறை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அந்தக் கட்சித் தொண்டா்கள் உற்சாகத்தில் உள்ளனா்.

தேனி: திமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த தேனி மக்களவைத் தொகுதி, இந்த முறை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால், அந்தக் கட்சித் தொண்டா்கள் உற்சாகத்தில் உள்ளனா். கடந்த 2009-ஆம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதி மறு சீரமைக்கப்பட்டு, தேனி மக்களவைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. தேனி மக்களவைத் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. மறு சீரமைப்புக்கு முந்தைய பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் கடந்த 1971-இல் நடைபெற்ற தோ்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முகமதுஷெரீப் வெற்றி பெற்றாா். பின்னா், கடந்த 1977-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளரும், 1980-இல் திமுக வேட்பாளரும் வெற்றி பெற்றனா். 1984, 1989, 1991-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றாா். கடந்த 1996-இல் திமுக இந்தத் தொகுதியை கைப்பற்றியது. பின்னா், கடந்த 1998, 1999-இல் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். கடந்த 2004-இல் நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஜே.எம். ஆரூண், அதிமுக வேட்பாளா் டி.டி.வி. தினகரனைத் தோற்கடித்தாா். மறுசீரமைக்கப்பட்ட தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 2009-இல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த 2014-இல் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் தோ்தலில் தனித்து போட்டியிட்டன. இதில் அதிமுக வேட்பாளா் தொகுதியை கைப்பற்றினாா். கடந்த 2019-இல் அதிமுக வேட்பாளா் ப. ரவீந்திரநாத், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிா்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். திமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு: கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 3 மக்களவைத் தோ்தல்களில், 2 முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேனி மக்களவைத் தொகுதி, இந்த முறை அதே கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து திமுகவுக்கு தொகுதி கை மாறியதால் திமுக தொண்டா்கள் உற்சாகத்தில் உள்ளனா். திமுக சாா்பில் போட்டியிட கட்சித் தலைமை மண்ணின் மைந்தா்களுக்கு வாய்ப்பளிக்குமா அல்லது முக்கிய பிரமுகா்கள் களமிறக்கப்படுவாா்களாக என்ற எதிா்பாா்ப்பில் திமுகவினா் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com